கல்முனைக்கு மற்றுமொரு விசேட நிபுணர்கள் குழு தீப்பிற்றிய எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆராய வருகை - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 8, 2020

கல்முனைக்கு மற்றுமொரு விசேட நிபுணர்கள் குழு தீப்பிற்றிய எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆராய வருகை

பாறுக் ஷிஹான்

நியூ டயமன்ட் கப்பலை ஆராய்வதற்காக மற்றுமொரு 11 பேர் கொண்ட குழு அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதிக்கு வருகை தந்துள்ளது.

இவர்கள் நேற்று (7) முற்பகல் அம்பாறை சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீப்பிற்றிய நியூ டயமன்ட் கப்பல் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக கடற்படை கப்பல் மூலம் தீ பிடித்த கப்பலை சென்றடையவுள்ளனர்.

இவ்வாறு இலங்கை வந்துள்ள குறித்த வெளிநாட்டு நிபுணர்கள் குழுவில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 10 பேரும் ஜேர்மனி நாட்டை சேர்ந்த ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களில் மீட்பு பணிகளின் விசேட நிபுணர்களும் இடர்களை மதிப்பிடுபவர்களும் சட்ட ஆலோசகர்களும் அடங்குகின்ற அதேவேளை கல்முனைக்கு வருகை தந்த இவர்கள் கடற்படையின் யுத்தக் கப்பல் ஒன்றின் மூலம் தீப்பற்றிய கப்பலை நோக்கிச் சென்றுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இவ்வாறு வருகை தந்த இக்குழுவினரை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கு.சுகுணன் வழிகாட்டலில் கொரோனா தொற்று நோய் தடுப்பு தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கையினை சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் பிரிவின் வைத்திய அதிகாரி நாகூர் ஆரிப் மேற்பார்வை செய்திருந்து அறிவுறுத்தல்களை வழங்கி சுகாதார ஆலோசனைகளை உரிய தரப்பினருக்கு வழங்கி இருந்தார்.
மேலும் விசேட நிபுணர்களை படகின் மூலம் கொண்டு சென்ற கடற்படையினர் மீண்டும் கரைக்கு திரும்பியவுடன் முகாம் முன்பாக கொரோனா தொற்று நீக்கும் செயற்பாட்டிற்கு உள்ளாக்கப்பட்டு முகாமிற்கு அனுமதித்ததை அவதானிக்க முடிந்தது.

அத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) மாலை குறித்த கப்பல் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கு ஏற்கனவே வெளிநாட்டு நிபுணர்கள் குழுவினர் கல்முனைக்கு வருகை தந்திருந்தனர்.

இவர்களில் பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் உள்ளடங்குவதுடன் வருகை தந்த நிபுணர்கள் குழுவில் இரு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை கப்பலில் இருந்து எண்ணைக் கசிவு ஏற்பட்டால் அதனைத் தடுக்கும் வகையில் இந்திய கடற்பாதுகாப்புத் திணைக்களத்தின் 20 பொறியியலாளர்கள் குறித்த பகுதிக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment