20 ஆவது திருத்தத்தில் சர்வாதிகார ஆட்சிக்கான பண்புகளே காணப்படுகின்றது, மீளாய்வு தேவையில்லை என கூறுவது சர்வாதிகார ஆட்சிக்கான ஆரம்ப நடவடிக்கையாகும் - ரஞ்சித் மத்தும பண்டார - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

20 ஆவது திருத்தத்தில் சர்வாதிகார ஆட்சிக்கான பண்புகளே காணப்படுகின்றது, மீளாய்வு தேவையில்லை என கூறுவது சர்வாதிகார ஆட்சிக்கான ஆரம்ப நடவடிக்கையாகும் - ரஞ்சித் மத்தும பண்டார

(செ.தேன்மொழி) 

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சர்வாதிகார ஆட்சிக்கான பண்புகளே காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு 19 பிளஸை கொண்டு வருவதற்கே முயற்சிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்று இடம்பெற்றது. இதன்போது கருத்துரைக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, இலங்கை சுதந்திரம் அடைந்த தினம் தொடக்கம் இதுவரையில் அரசியலமைப்பு பல்வேறு முறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் 17 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மாத்திரமே ஜனநாயக பண்புகளுக்கு முதலிடம் கொடுத்து, மக்களின் நலனை மாத்திரம் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்ட திருத்தங்கள். ஏனையவை அரசியல்வாதிகளின் நலனை கருத்திற் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. 

காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனா நாட்டின் அதிகாரம் அனைத்தும் ஒருவரின் கையில் இருந்தாலே நாட்டை முன்னேற்ற முடியும் என்ற எண்ணத்திலே செயற்பட்டிருந்தார். அதற்கமைய நாடும் முன்னேற்றம் கண்டிருந்தது. ஆனால் அவருக்கு பொறுத்தமாக இருந்த நிறைவேற்று அதிகாரம் என்ற ஆடை காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாசவுக்கோ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கோ பொறுந்தவில்லை. 

இந்நிலையில் சமூகத்தின் மத்தியில் நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக பல எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன. அதன் காரணமாகவே 17 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது ஜனநாயக பண்புகளுக்கு முதலிடம் கொடுத்து, மக்களின் நலனை கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதனையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது ஆட்சி காலத்தில் நீக்கிவிட்டு நிறைவேற்று அதிகாரத்திற்கு மேலும் அதிகூடிய அதிகாரங்களை வழங்கும் வகையில் 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியிருந்தார். 

அதற்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கம் அந்த திருத்தத்தை நீக்கி 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவந்தது. இதில் ஜனநாயக கொள்கை மற்றும் மக்களின் நலனை கருத்திற் கொண்டு பல்வேறு பண்புகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 19 ஆவது திருத்ததில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை நீக்க வேண்டும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கும் தீர்மானித்துள்ளது. 

20 ஆவது திருத்தத்தில் காணப்படும் சர்வாதிகார பண்புகளை கொண்ட ஏற்பாடுகள் தொடர்பில் தற்போது விமர்சனங்கள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், நீதி அமைச்சர் அலி சப்ரி, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் இந்த திருத்தத்தை தாம் தயாரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். 

திருத்தம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் குழுவொன்றை நியமித்திருந்தார். இந்நிலையில் ஜனாதிபதி தானே இந்த திருத்தத்தை தயாரித்ததாக அமைச்சரவையில் அறிவித்துள்ளதுடன், திருத்தம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு தேவையில்லை என்றும் கூறியிருக்கின்றார். இது சர்வாதிகார ஆட்சிக்கான ஆரம்ப நடவடிக்கைகளாகும். 

இந்நிலையில் தற்போது மரண தண்டனை கைதி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொடுத்துள்ளவர்கள், எதிர்காலத்தில் சிறைக் கைதிகளையும் விடுதலை செய்வதற்கான வாய்ப்புள்ளது. கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை நீக்குவதன் ஊடாக மக்களது பணத்தை அதிகளவில் கொள்ளையிடுவதற்கான வாய்ப்பையே ஏற்படுத்தவுள்ளனர்.

குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர போன்ற சிரேஷ்ட அதிகாரிகளை சிறைவைத்து, போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதனால், எதிர்வரும் காலங்களில் பொலிஸார் சுயாதீனமாக செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? இந்நிலையில் சர்வாதிகார ஏற்பாடுகளை கொண்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை விடவும், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் சிறந்ததே. அதனால் அதில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து 19 பிளஸ் ஊடாக செல்வதையே ஐக்கிய மக்கள் சக்தி விரும்புகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad