முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தங்களை அவசரமாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் - அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Sunday, August 30, 2020

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தங்களை அவசரமாக நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் - அமைச்சர் அலி சப்ரி

பரிந்துரைக்கப்பட்டுள்ள, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத் திருத்தங்களை அமுலுக்குக் கொண்டு வருவதற்கான கால எல்லையொன்றினை என்னால் தெரிவிக்க முடியாது என்றாலும் கட்டாயமாக அவசரமாக நாம் இதனை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் பற்றி என்னிடமும் சில கருத்துகள் உள்ளன. என்றாலும் அமைச்சரவையே அரசியல் கொள்கைகளைத் தீர்மானிக்க வேண்டும். 

உதாரணமாக நான் 18 வயதுக்குக் கீழான திருமணத்தை எதிர்க்கிறேன். இவ்வயதெல்லை எங்கும் பொதுவானதாகும். சவூதி அரேபியாவும் 18 வயதுக்குக் கீழான திருமணத்தை அனுமதிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளது. 

பெண்களை காதி நீதிபதிகளாக நியமிக்கக்கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. மலேசியாவில் பிரதம நீதியரசராக பெண் ஒருவரே கடமையாற்றுகிறார். குறிப்பாக முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்திருத்தங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.

இதேவேளை மேலும் பல விடயங்களை நாம் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. 19 ஆவது திருத்தச் சட்டம் இதில் முக்கியமானது என்பதுடன் நீதித்துறை டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டியுள்ளது. 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் மாற்றங்களைச் செய்வதற்காகவே 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இதேவேளை இதனால் 13 ஆவது திருத்தத்திற்குப் பாதிப்பு ஏற்படாது.

நான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டதை ஒரு சில அடிப்படைவாதிகளே எதிர்க்கிறார்கள். பெளத்த அமைப்புக்கள் அல்ல. அவர்கள் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே. 

நான் எப்போதும் தெரிவிப்பது என்னவென்றால் அடிப்படைவாதிகள் அனைத்துத் தரப்பிலும் இருக்கிறார்கள். இலங்கை அனைத்து மக்களுக்குமான நாடாகும். அனைவரும் சமமாக கணிக்கப்பட வேண்டும். இந்நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அமைச்சரவையில் நான் ஒருவனே முஸ்லிமாக இருக்கிறேன். இதேவேளை டக்ளஸ் தேவானந்தா மீன்பிடித்துறை அமைச்சராக அமைச்சரவையில் இருக்கிறார். நாமிருவரும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 

சட்டத்துறையின் மறுசீரமைப்பு மற்றும் நீதித்துறையில் வழக்குகள் நீண்ட காலமாக தாமதிக்கப்படுகின்றமை என்பவற்றைக் கருத்திற்கொண்டே சட்டத்துறையில் அனுபவமுள்ள என்னை ஜனாதிபதி நீதியமைச்சராக நியமித்துள்ளார் என்றார்.

ஏ.ஆர்.ஏ.பரீல் - Vidivelli

No comments:

Post a Comment