முன்னாள் அமைச்சர் சம்பிக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு செப்டெம்பர் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 28, 2020

முன்னாள் அமைச்சர் சம்பிக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு செப்டெம்பர் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, மேலதிக விசாரணை நடவடிக்கைக்காக எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படும் என, கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இவ்வழக்கு இன்று (28) கொழும்பு, மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த வழக்கின் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக, அவரது அமைச்சின் சாரதியாக கடமையாற்றிய திலும் துஷித குமார, சம்பவம் இடம்பெற்ற வேளையில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து திலும் துஷித குமார மற்றும் சுதத் அஸ்மடல பிரதிவாதிகள் தொடர்பில் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பிணை தொடர்பான நிபந்தனைகள் தொடர்பில் நீதிமன்றத்தினால் ஆராயப்பட்டது. 

கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி, வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட WP KP 4575 எனும் ஜீப் வண்டியை பாதுகாப்பாற்ற முறையில் செலுத்தி சங்திப் சம்பத் என்பவர் மீது விபத்தை ஏற்படுத்தியமை, அவ்விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்காமல் தப்பிச் சென்றமை, படுகாயம் ஏற்படுத்தியமை, சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக, அவரது சாரதி, வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகிய மூவருக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment