மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்ல நூறு வீத ஆதரவை பெற்றுக் கொடுத்திருந்தாலும், அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்பட முடியாது - அசோக்க அபேசிங்க - News View

About Us

About Us

Breaking

Friday, August 28, 2020

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்ல நூறு வீத ஆதரவை பெற்றுக் கொடுத்திருந்தாலும், அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்பட முடியாது - அசோக்க அபேசிங்க

I was first to call for change in UNP leadership - Ashok Abeysinghe
(செ.தேன்மொழி)

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்ல நூற்றுக்கு நூறு வீத ஆதரவை மக்கள் அரசாங்கம் ஒன்றிற்கு பெற்றுக் கொடுத்திருந்தாலும், அவர்களால் நாட்டின் அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்பட முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.

இதேவேளை மக்களின் எண்ணங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட்டால், பிரதான எதிர்கட்சியாக மக்களின் பக்கமிருந்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, வரவு செலவு திட்டத்தை முன்வைக்காத முதல் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கமே வரலாற்றில் பெயர் பதிக்கப்போகின்றது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை அடுத்து, மார்ச் மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் அதுவரையில் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் அரசாங்கம் இடைக்கால கணக்கறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ளவில்லை.

இந்நிலையில் மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றம் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உரிய தினத்தில் பொதுத் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டதினால், பாராளுமன்றத்தை உரிய தினத்தில் திறப்பதற்கும் முடியாமல் போயிருந்தது.

இந்நிலையில் கடந்த அரசாங்கத்தில் இடைக்கால கணக்கறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதற்கமைய கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையில் அரச செயற்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 

பாராளுமன்றம் கடந்த 20 ஆம் திகதியே திரும்ப செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 30 தொடக்கம் இன்று வரையில் அரசாங்கம் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ளாமல் எவ்வாறு நிதி ஒதுக்கீட்டை செய்தது ? இது அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடாகும். 

தற்போது செப்டெம்பர் தொடக்கம் டிசம்பர் மாதம் வரைக்கான இடைக்கால கணக்கறிக்கை அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும்.

சுபீட்சமான அரசாங்கம் என்று கூறப்படும் அரசாங்கம் எவ்வாறு தொடர்ந்தும் செயற்படப்போகின்றது என்பதை நாங்கள் அவதானமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். 

இதேவேளை கடந்த காலங்களையும் விட தற்போது கடன் தொகையானது பாரியளவில் அதிகரித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஆட்சிக் காலத்தின் போது 95 ஆயிரம் ரூபாவாக இருந்த தனி நபர் ஒருவருக்கான கடன் தொகை, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரித்திருந்தது. தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது அது ஐந்து இலட்சத்திலிருந்து ஆறு இலட்சம் ரூபாய் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

இதேவேளை அரசாங்கத்தின் முறையற்ற வரி குறைப்பினாலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு ஊதியம் பெற்றுக் கொடுப்பதற்காக இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து நிதியை பெற்றுக் கொண்டுள்ளது. 

இந்நிலையில் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பது தொடர்பில் அக்கறை செலுத்தாமல், ராஜபக்ஷர்கள் தங்களது குடும்பத்தின் பலத்தை பாதுகாப்பதற்காக அவசரமாக 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க முயற்சிக்கின்றார்கள்.

ஒரு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அல்ல, நூறுவீத ஆதரவை மக்கள் அவர்களுக்கு பெற்றுக் கொடுத்திருந்தாலும், அவர்கள் நாட்டின் அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்பட முடியாது. அரசாங்கம் மக்களின் எண்ணங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால், பிரதான எதிர்கட்சி என்ற வகையில் நாங்கள் மக்களின் பக்கம் இருந்தே செயற்படுவோம்.

No comments:

Post a Comment