சிங்கப்பூர் பிரஜை மத்திய வங்கியினை கொள்ளையடிக்கும்போது இலங்கை பிரஜை ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதால் எவ்வித பிரச்சினையுமில்லை - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - News View

About Us

About Us

Breaking

Friday, August 28, 2020

சிங்கப்பூர் பிரஜை மத்திய வங்கியினை கொள்ளையடிக்கும்போது இலங்கை பிரஜை ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதால் எவ்வித பிரச்சினையுமில்லை - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

மைத்திரிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்கியது பிரச்சினைக்குரியது: பிரசன்ன  ரணதுங்க ~ Jaffna Muslim
(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகுவதற்கு விருப்பம் தெரிவித்தால், ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை சுயமாக விட்டுக் கொடுக்க தயாராக உள்ளார்கள். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் முழுமையாக செயற்படுத்தப்படும். எதிர்த்தரப்பின் ஆதரவை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் உடுகம்பொல காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் எவ்வகையான பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாட்டு மக்கள் அனுபவ ரீதியில் உணர்ந்து கொண்டுள்ளார்கள். இத்திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு பொருத்தமான திருத்தம் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலங்களில் நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பு கொண்டு வரப்படும் என்பதை மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். அதன் காரணமாகவே மக்கள் இரண்டு தேசிய தேர்தல்களிலும் அமோக ஆதரவை வழங்கியுள்ளார்கள்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்து புதிய திருத்தம் உருவாக்குவதற்கு கிடைக்கப் பெற்றுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு பயன்படுத்தப்படும். புதிய திருத்தத்தை நிறைவேற்ற எதிர்த்தரப்பினரது ஆதரவு அவசியமற்றது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மீதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் உருவாக்கத்தின் ஊடாக பலப்படுத்தப்படும்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாட்டு மக்களை இலக்காகக் கொண்டு வரப்படவில்லை மாறாக ராஜபக்ஷர்களின் குடும்பத்தாரை இலக்குப்படுத்தி கொண்டுவரப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அதிகார ரீதியில் எழுந்த முரண்பாடுகளின் காரணமாக நாடு பாரிய விளைவுகளை எதிர்கொண்டது. தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது. 19 ஆவது திருத்தத்தின் ஒரு பகுதியை நீக்கி பிறிதொரு பகுதியை திருத்துவது எமது நோக்கமல்ல முழுமையான திருத்தம் உருவாக்குவது பிரதான நோக்கமாக உள்ளது.

சிங்கப்பூர் நாட்டு பிரஜை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டு பிணைமுறி மோசடியில் கொள்ளையடிக்கும்போது இலங்கை பிரஜை ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்வதால் எவ்வித பிரச்சினைகளும் கிடையாது. பசில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வருவதற்கு எவ்வித தடைகளும் கிடையாது. அமெரிக்க இரட்டை குடியுரிமை மாத்திரமே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்ததிற்கு அமைய தடையாக உள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வர விருப்பம் தெரிவித்தால் ஆளும் தரப்பின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயமாகவே பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கிக் கொள்ள தயாராக உள்ளார்கள். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முழுமையாக நீக்கப்படும். என்றார்.

No comments:

Post a Comment