காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளை போராட்டம், கதவடைப்புக்கும் அழைப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளை போராட்டம், கதவடைப்புக்கும் அழைப்பு

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக நாளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாகவும், போராட்டம் நடைபெறும் நேரத்தில் ஒரு மணி நேர கதவடைப்பு செய்து தமது போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த எமது தாய்மார் அரசின் மீது நம்பிக்கையிழந்து நிற்கின்றனர். எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று அறியாதவர்களாக பல தாய்மார் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளோம். அதனாலேயே நாங்கள் சர்வதேசத்தை நம்பியுள்ளோம். சர்வதேசமே இலங்கை அரசின் மீது விசாரணை மேற்கொண்டு எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும்.

நாம் அழுவதற்கு கூட கண்ணீர் இல்லை. நாளும் பொழுதும் அழுது கண்ணீர் இல்லாது போய்விட்டது. எமது வேதனைகளுக்கும் வலிகளுக்கும் சர்வதேசம் தலையீடு செய்து எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும்.

சர்வதேசத்திடம் நீதி கேட்பதற்காக நாளை வடக்கு, கிழக்கில் மாபெரும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இப் போராட்டங்கள் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் திருகோணமலையிலும் நடைபெறுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு பேரணிஆரம்பமாகி பஸ் நிலையம் வரை சென்று முடிவடையவுள்ளது.

ஒரு மணிநேரம் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி தமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அழைக்கின்றோம் என்றனர்.

சு.பாஸ்கரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad