ராஜினாமா செய்யவுள்ள ஜப்பான் பிரதமர் - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

ராஜினாமா செய்யவுள்ள ஜப்பான் பிரதமர்

சுகாதார காரணத்திற்காக ஜப்பான் பிரதமர் சின்சோ அமே தமது பதவியை இராஜினாமா செய்யவிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெருங்குடல் அலட்சி நோயினால் அவர் பல ஆண்டுகளாக அவதியுற்று வரும் நிலையில் அண்மைக் காலத்தில் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது.

இந்நிலையில் அரச செயற்பாடுகளில் குழப்பங்களைத் தவிர்க்க 65 வயதான அபே விரும்புவதாக என்.எச்.கே ஒளிபரப்புச் சேவை குறிப்பிட்டுள்ளது.

இந்த வாரத்தின் ஆரம்பத்திலேயே அவர் ஜப்பானில் தொடர்ச்சியாக பிரதமர் பதவியில் இருப்பவராக பதிவானார். அவர் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் பிரதமராக உள்ளார்.

தனது பதின்ம வயதில் இருந்தே பெருங்குடல் பாதிப்பின் நாட்பட்ட நோயினால் அவதிப்பட்டு வரும் அபே 2007 ஆம் ஆண்டிலும் பெருங்குடல் அலட்சி காரணமாக பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

தீவிர பழைமைவாதி மற்றும் தேசியவாதி என்று புகழ்பெற்ற அபே, தமது கடுமையான பொருளாதாரக் கொள்கைகள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்துள்ளார்.

ஜப்பானின் பாதுகாப்பை பலப்படுத்திய அவர் இராணுவச் செலவுகளையும் அதிகரித்தார். எனினும் தற்பாது காப்பு தவிர்த்து இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கு தடையாக உள்ள அரசியலமைப்பின் 9ஆவது சட்டப் பிரிவில் திருத்தம் கொண்டுவர அவரால் முடியாமல் போனது.

ஒரு வார இடைவெளிக்குள் அபே இரு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு சென்றது அவரது உடல் நிலை குறித்த கவலைகளை ஏற்படுத்தி இருந்தது. அவரது பதவிக் காலம் 2021 செப்டெம்பர் வரை உள்ளது.

எனினும் ஜப்பானிய சட்டத்தின் படி பதவியில் இருக்கும் பிரதமருக்கு தமது பணிகளை தொடர முடியாத நிலையில் தற்காலிகமாக பதவி விலக முடியும்.

பதவி வரிசையில் அடுத்த நிலையில் துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் டாரோ ஆசோ இருப்பதோடு அதற்கு அடுத்து அமைச்சரவை தலைமை செயலாளர் யொசிஹிடே சுகோ உள்ளார்.

பதில் பிரதமருக்கு இடைத் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்க முடியாதபோதும் புதிய கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை ஒப்பந்தங்கள் மற்றும் வரவுசெலவுத் திட்டம் போன்ற விடயங்களை கையாள முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad