நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் செப்டம்பர் 15 க்கு முன்னர் மேன்முறையிடலாம், தகுதியானோர் உள்வாங்கப்படுவர் - News View

Breaking

Post Top Ad

Saturday, August 29, 2020

நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் செப்டம்பர் 15 க்கு முன்னர் மேன்முறையிடலாம், தகுதியானோர் உள்வாங்கப்படுவர்

வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்டவர்கள், மேன்முறையீடு செய்யலாமென, அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. 

அரசாங்கத்தின் இத்திட்டத்தின் கீழ், இது தொடர்பில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர், விபரம் அமைச்சின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

இதில் 50,000 இற்கும் மேற்பட்டோர் பயிலுநர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆயினும், மேலும் சிலர் தொழில் வாய்ப்பை பெற்றிருந்தமை, ஊழியர் சேமலாப நிதிய அங்கத்துவம் கொண்டிருந்தமை, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றிருந்தமை, விண்ணப்பித்தவர் வெளிநாட்டில் இருந்தமை உள்ளிட்ட காரணங்களால் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் மேலும் 10,000 பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்க ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, ஊழியர் சேமலாப நிதியத்தில் (EPF) அங்கத்துவம் பெற்றுள்ள மற்றும் தொழிலொன்றில் ஈடுபட்டு வருவதன் (Job) காரணமாக நிராகரிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அவர்களை, மேன்முறையீடு செய்யுமாறு அமைச்சின் செயலாளர், ஜே.ஜே. ரத்னசிறி விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார். 

அதற்கமைய, அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் இணையத்தளமான www.pubad.gov.lk இல் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புக்கு அமைய, தங்களது மேன்முறையீட்டை தத்தமது பிரதேச செயலங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி, ஏனைய தகைமைகளை பூர்த்தி செய்துள்ள மேன்முறையீட்டாளர், தகைமை ஆராயப்பட்டு, பட்டதாரி பயிலுநர் பயிற்சிக்கு அழைப்பு விடுக்க அரசு தீர்மானித்துள்ளது. 

மேன்முறையீடுகளை சமர்ப்பித்தல்
அதன்படி, அப்பட்டதாரிகள்‌ இத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ள மாதிரிப்‌ படிவத்திற்கமைய தாயாரிக்கப்பட்ட மேன்முறையீட்டை கீழே குறிப்பிடப்பட்டுள்ள உறுதிப்படுத்தல்‌ ஆவணங்களுடன்‌ தாம்‌ விண்ணப்பித்துள்ள பிரதேச செயலகப்‌ பிரிவின்‌ பிரதேச செயலாளரிடம்‌ 2020.09.15ஆம்‌ திகதிக்கு முன்னர்‌ சமர்ப்பித்தல்‌ வேண்டும்‌.

i.. தற்போது தொழிலில்‌ ஈடுபடவில்லை எனத் தெரிவிக்கும் சத்தியப்‌ பிரமாணம்‌.

ii. தொழிலிலிருந்து விலகியுள்ள படி அந்த நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட கடிதம்‌. 

iii. அந்த நிறுவனத்தில்‌ தொழில்‌ புரிந்துள்ளதாயின்‌ பதவி / சம்பளம்‌ என்பன குறிப்பிடப்பட்டுள்ள நியமனக்‌ கடிதம்‌. 

பிரதேச செயலாளர்கள்‌ அம்‌ மேன்முறையீடுகளை மாவட்டச்‌ செயலாளரிடம்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌ என்பதோடு, மாவட்டச்‌ செயலாளர்‌ அந்த ஆவணங்களை அரச சேவைகள்‌, மாகாண சபைகள்‌ மற்றும்‌ உள்ளூராட்சி அமைச்சுக்கு, அனுப்பி வைத்தல்‌ வேண்டும்‌ என்றும்அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad