முஸ்லிம் காங்கிரஸின் ஆசனம் கல்குடா தொகுதிக்கே கிடைக்கும் - மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஹபீப் றிபான் - News View

About Us

About Us

Breaking

Monday, July 27, 2020

முஸ்லிம் காங்கிரஸின் ஆசனம் கல்குடா தொகுதிக்கே கிடைக்கும் - மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஹபீப் றிபான்

‘கல்குடா தொகுதியில் இருக்கின்ற முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு வாக்குச் சரிவு ஏற்பட்டுள்ளது. அவருடன் இருந்த அதிகமானவர்கள் என்னுடன் இணைந்து எனது வெற்றிக்காக செயற்படுகின்றார்கள். கல்குடா தொகுதியில் புதிய மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து இளைஞர்கள் தற்போது செயற்படுவதனை காணக் கூடியதாகவுள்ளது’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஹபீப் றிபான் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஹபீப் றிபான் வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


கேள்வி: அரசியலில் புதுமுகமாக களம் இறங்கியுள்ள நீங்கள் உங்கள் அரசியல் பிரவேசம் பற்றி கூறுங்கள். 

பதில்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற ஒரு தேசிய கட்சியாகும். அதில் வேட்பாளராக நிற்குமாறு கட்சித் தலைமை கேட்டுக் கொண்டதற்கிணங்க அதில் களம் இறங்கியுள்ளேன். 

கேள்வி: அரசியலில் முதன் முதலில் பிரவேசித்துள்ள நீங்கள் உங்களது கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன? 

பதில்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம்தான் முஸ்லிம்களின் உரிமை பற்றி பேசுவதால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம்தான் அரசியலுக்கு உகந்தது என்று நினைத்து இந்தத் தேர்தலில் அந்தக் கட்சியினூடாக போட்டியிடுகின்றேன். 

கேள்வி: மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலக எல்லைகள் தொடர்பான காணிப் பிரச்சினை மிக நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது இது தொடர்பாக நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? 

பதில்: என்னைப் பொறுத்த வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இது தொடர்பாக பல கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. கடந்த நல்லாட்சியின் போதும் உள்ளூராட்சி அமைச்சருடன் கலந்தாலோசனை செய்திருந்தது. நான் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டால் இந்த விடயத்தை செவ்வனே செய்வேன் என்று நினைக்கின்றேன். 

கேள்வி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்தால் அது கல்குடா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உங்களுக்குத்தான் கிடைக்கும் என்று எவ்வாறு கூறுகின்றீர்கள்? 

பதில்: அது நிச்சயம் கிடைக்கும். இந்தத் தேர்தலில் கல்குடா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்குள்ள ஒருவரை பாராளுமன்றம் அனுப்புவதற்குரிய வீயூகத்தை அமைத்துத்தான் நாங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். நிச்சயமாக முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக கிடைக்கும் ஆசனம் கல்குடா தொகுதிக்குத்தான் இம்முறை கிடைக்கும். கல்குடா தொகுதியில்தான் முஸ்லிம்களின் வாக்குகள் அதிகம் இருக்கின்றன. 

கேள்வி: வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் உங்களால் என்ன நடவடிக்கை மேற்கொள்ள முடியும்? 

பதில்: கடந்த ஆட்சிக் காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரின் கீழ் உள்ள அமைச்சின் கீழ் இந்த கடதாசி ஆலை இருந்தது. அவரது காலத்தில் கடதாசி ஆலையை மீள இயக்குவதற்குரிய வேலைகளை செய்திருந்தால் இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கியிருக்க முடியும். அவர் அந்த வேலையைச் செய்யவில்லை. நான் பாராளுமன்ற பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டால் இந்தப் பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கும்படி கோரிக்கை விடலாம். இது தவிர அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளராக இருக்கின்ற இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அமீர்அலி கூட தனது கட்சியின் தலைவருக்கூடாக இந்த விடயத்தை முன்னெடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய விடயம். 

கேள்வி: பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களாக இருக்கின்றவர்கள் வாழைச்சேனை கடதாசி ஆலையில் தேர்தலின் பின்னர் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழ்ப் பிரதேசங்களில் விண்ணப்பப்படிவம் வழங்குவதாக அறிய முடிகின்றது. கடதாசி ஆலையில் தமிழ் இளைஞர்களுக்கு மாத்திரம் வேலைவாய்ப்பு வழங்குவது எவ்வாறு சாத்தியப்படும்? 

பதில்: இது ஒரு பிழையான விடயம். ஆனால் இந்த காலப் பகுதியில் இவ்வாறு வேலைவாய்ப்புக்களை வழங்கவும் முடியாது. அப்படியிருந்து கடதாசிஆலை அமைந்துள்ள பிரதேசம் முஸ்லிம் பிரதேசம் என்றபடியால் எங்களது பிரதேச இளைஞர்களையும் இணைத்துக் கொள்வது கட்டாயமாகவுள்ளது. 

கேள்வி: இந்தத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்? 

பதில்: முஸ்லிம் பெயர் தாங்கிய கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் கற்றவர்கள். எனக்கு வாக்களிப்பதன் ஊடாக ஒரு இளைய தலைமைத்துவத்தை பாராளுமன்றம் கொண்டு போக முடியும். எல்லாப் பிரச்சினைகளுக்கும் என்னால் முடிந்த வரை தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பேன். 

எஸ்.எம்.எம்.முர்ஷித் - (கல்குடா நிருபர்)

No comments:

Post a Comment