“வன்னி மக்களின் ஏழ்மை, அப்பாவித்தனங்களை பயன்படுத்தி வாக்குகளை சூறையாட சதி” - வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! - News View

Breaking

Post Top Ad

Tuesday, July 28, 2020

“வன்னி மக்களின் ஏழ்மை, அப்பாவித்தனங்களை பயன்படுத்தி வாக்குகளை சூறையாட சதி” - வவுனியாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

வன்னி மக்களின் ஏழ்மை ...
வன்னி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக, அதிகார பலத்தையும் பண பலத்தையும் பிரயோகிக்கும் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

வவுனியா, மாணிக்கர் இலுப்பைக்குளத்தில், இன்று (28) ஊடகவியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, வன்னி மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு மொட்டுக் கட்சியினரின் தேர்தல் அடாவடித்தனங்களும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. வெளிமாவட்டத்திலிருந்து வேட்பாளர்களை களமிறக்கியதால் வந்த வினையே இது. மக்களின் ஏழ்மையையும் அப்பாவித்தனத்தையும் தேர்தல் மூலதனமாக்கி, பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இருபது வருடங்களாக நாம் தேர்தல் களத்தில் நிற்கின்றோம். ஆளுங்கட்சியில் அதிகாரமுள்ள அமைச்சர்களாக இருந்த வேளையிலும் தேர்தலில் போட்டியிட்டோம்.. எனினும், அந்தக் காலங்களில் ஜனநாயகத்தை மதித்து, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களுக்கு இடமளித்து, அவர்கள் சுயாதீனமாக தேர்தல்களில் ஈடுபட முன்னுதாரணமாக இருந்திருக்கின்றோம்.

ஆனால், இம்முறை வன்னி மாவட்டத்தின் தேர்தல் களம் மாற்றமாகியுள்ளது. கடந்த காலங்களில், வேறு மாவட்டதிலேதான் இவ்வாறானவர்களின் அட்டகாசம் இருந்தது. ஆனால், இப்போது வன்னியில் புதிதாக தலைவிரித்தாடுகின்றது. அரச வளங்களையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தி, மனம்போன போக்கில் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பொலிஸார் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமல் கைகட்டி நிற்கின்றனர். தேர்தல்கள் ஆணையகம் கூட இதனைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது.

எதிர்க்கட்சிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பல்வேறு தடைகள் போடப்படுகின்றன. கெடுபிடிகள் இடம்பெறுவதோடு, சோதனைச் சாவடிகளில் பலமுறை இறக்கியேற்றலும் இருக்கின்றது. ‘ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு இன்னுமொரு நீதி’ என்ற பாகுபாடு காட்டப்படுகின்றது. சுயாதீனமாக தேர்தல் நடவடிக்கைளில் ஈடுபட முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்று (27) இந்தப் பிராந்தியத்தின் ஊரோன்றுக்குள், அனுமதி பெறாமல் புகுந்த சிலர், அடாவடித்தனங்களில் ஈடுபட்டதனால், ஊர்வாசிகள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையானது வேதனையளிக்கின்றது.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான அமைப்பு (கபே அமைப்பு) போன்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள், இந்த நிலையை கவனத்திற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றேன்” என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad