மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 1, 2020

மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்

தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையினை கேட்டு காலத்தை வீண்டித்தார்களே தவிர வேறு எதையும் செய்ததாக தெரியவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் மட்டு. மாவட்ட வேட்பாளர் க.கோபிநாத் தெரிவித்தார். 

மட்டு. பட்டிப்பளை செயலக பிரிவிலுள்ள பன்சேனை, பனிச்சையடி முன்மாரி பிரதேசங்களில் நேற்று முன்தினம் நடந்த பிரசார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கு அரசியல்வாதி மீதோ கட்சி மீதோ எவ்வித கோபமுமில்லை. ஆனால் எம் ஏழை மக்களை ஏமாற்றுபவர்கள் மீதுதான் எனக்கு கோபமுள்ளது. பல கிராமங்களிலுள்ள அடிமட்ட மக்கள் மத்தியில் இருக்கும் வலி எனக்கு புரிகிறது. 

அந்த வலி புரிந்த படியால்தான் பல அபிவிருத்தி திட்டங்களை கடந்த காலங்களில் அரசியலுக்கு வரும்முதல் மேற்கொண்டிருந்தேன். பாராளுமன்ற உறுப்பினராக வந்தால்தான் செய்வேன் என்று சொல்லவில்லை. வரும்முதல் என்னால் இயன்ற பல அபிவிருத்திகளை செயலில் செய்து காட்டியுள்ளேன். 

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என கூறுபவர்கள், எதிர்வரும் காலங்களில் ஏகபிரதிநிதிகள் யார் என்பதை தமிழ் மக்கள் உணர்த்துவார்கள். அரசியல் கட்சி என்பது மக்கள் மத்தியில் உருவெடுப்பதாக இருந்தால் மக்கள் மத்தியில் கட்சியும் கட்சியில் போட்டியிடுபவர்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

சமூகத்தில் உள்ளவர்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்குபவர்கள் எவ்வாறானவர்களாக, எவ்வாறான பின்னணியில் இருந்தனர் என்பதை அறிந்ததன் பிற்பாடே சமூகம் அவ்வாறானவர்களுக்கு அரசியல் அந்தஸ்தை வழங்கும். 

தமிழ் மக்களின் வேலை வாய்ப்பு, அபிவிருத்தி, உரிமை என்பவைதான் எனது கொள்கை. எம்மால் இப்போது எதை பெற்றுக் கொள்ள இயலுமோ அதை பெற்றுக் கொள்ள வேண்டும். எம்மால் என்ன பெற வேண்டுமோ அதற்காக போராட வேண்டும். 

ஆக இவ்விரண்டையும் சமாந்தரமாக செய்துகொண்டு போகவில்லை என்றால் நிச்சயமாக எமது இனத்தை பாதிக்கும், பின்னோக்கி இட்டுச் செல்லும். சாதி, மதம், இனம் சார்ந்து அரசியலை முன்னெடுப்பவர்கள் செயல்வீரர்கள் அல்ல. 

மண்டூர் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad