கண்டியை உலகிலேயே மதிப்பு மிகுந்த கலாசார நகரமாக்குவோம், போகம்பரையில் ஹோட்டல் நிர்மாணம் பொய்ப் பிரசாரம் என்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

Breaking

Post Top Ad

Friday, July 31, 2020

கண்டியை உலகிலேயே மதிப்பு மிகுந்த கலாசார நகரமாக்குவோம், போகம்பரையில் ஹோட்டல் நிர்மாணம் பொய்ப் பிரசாரம் என்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

கண்டியை உலகிலேயே மதிப்புமிகுந்த கலாசார நகரங்கள் மத்தியில் முன்னணி நகரமாக்குவதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி செங்கடகல பிரதேசத்தில் (30) நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய பிரதமர், போகம்பர சிறைச்சாலை அமைந்துள்ள இடத்தில் ஹோட்டல் அமைக்க போவதாக சிலர் மேற்கொண்டு வரும் பிரசாரங்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என குறிப்பிட்டார்.

புத்தப்பெருமானின் தந்ததாது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தலதா மாளிகைக்கு முன்னாலுள்ள வீதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை, இறைச்சி கடை உரிமையாளர்கள் மாடுகளை ஏற்றிச் செல்லும் லொறிகள் மற்றும் இறைச்சிக்காக விலங்குகளை ஏற்றிச் செல்வதை தவிர்க்கும் வகையிலேயே ஆகும். அந்த வீதிக்கு பதிலாக மாற்று வீதி நிர்மாணிக்கப்பட்டு அதன்மூலம் நகரின் வாகன நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

புத்தப்பெருமானின் புனிதப்பல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இந்த வீதியூடாக இறைச்சிக்காக விலங்குகளை கொண்டு செல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாததுடன், அது யாருடைய கவனத்தையும் ஈர்க்காத ஒரு விடயமாகும். 

போகம்பர சிறைச்சாலை அமைந்துள்ள இடத்தில் ஹோட்டல் நிர்மாணிப்பதாக சிலர் மேற்கொண்டுவரும் பிரசாரங்களை முற்றிலும் நிராகரித்த பிரதமர், எதிர்காலத்தில் அமைக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாவது தலதா மாளிகை அமைந்துள்ள கண்டி நகரை கலாசார நகராக மாற்றி உலகின் கலாசார நகரங்கள் மத்தியில் மதிப்பு கூடிய நகரமாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதே ஆகும் என தெரிவித்தார்.

போகம்பரயிலிருந்து சுரங்கப்பாதை ஒன்றை அமைத்து கண்டி நகரின் வாகன நெரிசலை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றியடைய செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஸ்தாபிப்பதற்கு தலைமை தாங்கி செயற்பட்ட பசில் ராஜபக்ஷவை மறக்க முடியாதென்றும், கட்சியை கட்டியெழுப்புவதற்கு தங்களது காலம், தைரியம், உழைப்பு என்பவற்றை அர்ப்பணித்த அனைவரையும் ஒருபோதும் மறக்க முடியாது என்றும், பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, திலும் அமுனுகம, ஆனந்த அளுத்கமகே, லொஹான் ரத்வத்தே மற்றும் இம்முறை பொது தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad