நாங்கள் பிரிய வேண்டி வந்தமைக்கு காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுயநலம் சார்ந்த கொள்கைகள்தான் - விக்னேஸ்வரன் - News View

Breaking

Post Top Ad

Monday, July 27, 2020

நாங்கள் பிரிய வேண்டி வந்தமைக்கு காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுயநலம் சார்ந்த கொள்கைகள்தான் - விக்னேஸ்வரன்

பணம் கொடுத்து தமிழ் அரசுக்கட்சியை ...
கூட்டமைப்பினர் கொள்கை வழியில் பயணிக்காது சுய நல வழியை பின் பற்றப்போய் தமிழ் மக்களின் முதல் அணி என்கின்ற அந்தஸ்தை இழந்தமையினால்தான் நாம் மாற்று அணி ஆகியுள்ளோம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று மாலை 5.45 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ​முதலமைச்சராக பதவி ஏற்று பொதுமக்களை சந்தித்து எமது மக்களுக்கு எதிராக நடைபெற்றது. இனப்படுகொலைதான் என்று அதனை பகுத்து அறிந்து கொண்டபோது எத்தகைய ஒரு பெரும் பொறுப்பு என் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது என்பதை நான் அப்பொழுதுதான் உணர்ந்து கொண்டேன்.

அந்த கடப்பாட்டை உணர்ந்து கூட்டமைப்பு நடக்க முற்படவில்லை என்பது எனக்கு மன வருத்தத்தை தந்தது. எத்தனை இடர் வந்தாலும் எமது உரிமைகள் விடயத்தில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்களையோ, காட்டிக்கொடுப்புக்களையோ நாம் செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.

அதனால்தான் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போது இனப்படுகொலை தீர்மானத்தை கைவிடவோ அல்லது பொறுப்புக்கூறல் விடயத்தில் விட்டுக் கொடுப்புக்களை செய்யவோ நான் தயாராக இருக்கவில்லை. பிரச்சினைகளை அப்படியே விட்டு விட்டு தமது சுய இலாப சிந்தனைகளில் இருந்தார். இப்பொழுதும் அப்படித்தான் இருக்கின்றார்கள்.

கொள்கைகள் என்பது வெறும் வாய்ப்பேச்சு பொருளாக மாறி இருந்தன. நானும் சந்தர்ப்பவாதியாக மாறி சிங்கள மக்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் ஏற்கனவே இருந்த தொடர்புகள் காரணமாக நான் பிறந்து வளர்ந்தது கொழும்பில் அவர்களுடன் இருந்த தொடர்புகள் காரணமாக அரசாங்கத்துடன் இணைந்து அவர்களுக்கு ஏற்ப தாளம் போட்டு இருந்தால் அல்லது அவர்களை நெல்சன் மண்டேலாவிற்கு ஒப்பாக தூற்றி துதி பாடி இருந்தால் எமது மாகாண சபைக்கு பல மடங்கு நிதியை அவர்கள் ஒதுக்கி இருப்பார்கள்.

பல செயல்திட்டங்களை வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க அனுமதி வழங்கி இருப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்திருந்தால் தமிழ் மக்களின் பல தசாப்த கால உரிமைப் போராட்டங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பேன். பெரும் துரோகத்தை அதனால் நான் இழைத்திருப்பேன். அதனால்தான் நான் அத்தகைய தவறை செய்யவில்லை. 

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மட்டுமல்ல அப்போதைய பிரதமர் ஜனாதிபதியுடன் நான் பல தடவைகள் எமது கொள்கைகள் காரணமாக நான் முறண்பட நேர்ந்தது.

ஜனாதிபதி சிறிசேன என்னை கிளிநொச்சி இராணுவ முகாமில் மதிய உணவு உண்ண அழைத்த போது நாங்கள் இருவரும் பயணித்துக் கொண்டிருக்கும் போது இராணுவ முகாமில் மதிய உணவை உண்ணலாம் என கூறிய போது நான் இராணுவத்தினரை வடக்கில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும் என்று கூறி வருகின்றேன்.

நான் அப்படி அவர்கள் முகாமில் சென்று சாப்பிடுவது என்று கேட்டு அங்கு செல்ல மறுத்து விட்டேன். கொள்கையில் பற்று உள்ளவர்கள் சில விடயங்களை செய்ய மாட்டார்கள். சுயநலனுக்காக வழி தவற மாட்டார்கள். அவ்வாறு இல்லாமல் சுய நன்மைக்காக கூட்டமைப்பு பாதை மாறியதால்தான் எமது தேசிய கூட்டணி உருவாகியது.

எனவே நாங்கள் பிரிய வேண்டி வந்தமைக்கு காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுயநலம் சார்ந்த கொள்கைகள் நடவடிக்கைகள்தான்.

எமது தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக் கட்சி ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட கட்சியாக வரையறை செய்யப்பட்ட கொள்கையுடன் செயற்படுகின்றது. அதற்கான எழுத்து மூல உடன்பாட்டில் நாம் கைச்சாத்திட்டுள்ளோம்.

எம்முடைய தனி மனித உணர்வுகளோ அன்றி செயற்பாடுகளோ எதுவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாறாக கொள்கை வழி பயணத்தில் நாம் தொடரந்து செல்வோம். எமக்கு பின்பும் இந்த கட்சி நீடித்து நிலைத்து நிற்கும் என்று எதிர் பார்க்கின்றோம்.

தமிழரசுக் கட்சியினரின் ஆரம்ப கால நேர்வழிப் போக்கும் வெளிப்படைத்தன்மையும் தற்போது அற்றுப் போய்விட்டது. தமிழ் மக்களை ஆளுகின்ற ஏகபோக உரிமையை கொண்டவர்கள் தாங்கள் என்ற மமதையில் தமக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தமது சொந்த உறவுகளையே அவர்கள் உதரித்தள்ளி விட்டுள்ளார்கள்.

தாம் நினைத்தபடி அரசுக்கு முண்டு கொடுப்பதும் அரசில் இருந்து கிடைக்கப் பெறும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக தமது கொள்கையிலிருந்து விலகி தம்மை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்றதுமான தம் சார்பான பொருளாதார ரீதியாக வலுப்படுத்துகின்றதுமான ஒரு கூட்டமாக கூட்டமைப்பில் உள்ளவர்கள் இப்பொழுது மாறிவிட்டார்கள்.

அவர்களின் தனிப்பட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ளட்டும். மாடி வீடுகள் கட்டும், சொகுசு வாகனங்களில் சுற்றித் திரியட்டும் ஆனால் தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் அல்ல என்று மட்டும் கூறாது இருக்கட்டும். அவ்வாறு கூறுகின்றார்கள்.

கூட்டமைப்பினருக்கு சரித்திர அறிவு இல்லையென்றால் என்னிடம் கேட்கட்டும். நான் அவர்களுக்கு படிப்பித்து கொடுப்பேன். ஆனால் எமது அடையாளங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் வரலாற்று எச்சங்களையும் அளித்துவிட்டு தமிழர்களின் தாயகம் என்ற பதத்தை நீக்கி விடலாம் என்று பகல் கனவு காண்பவர்களுடன் அவர்கள் கைகோர்த்து பயணிக்காது இருக்கட்டும்.

அவ்வாறு அவர்களிடம் கேட்டுக்கொள்ளுகின்றோம். என் அன்பார்ந்த மக்களே எம்மை மாற்று அணி என அடையாளம் காட்டும் போது நாங்கள் கொள்கை உடையவர்கள், கொள்கையுடன் பயணிப்பவர்கள் என்று தான் அர்த்தம்.

கூட்டமைப்பினர் கொள்கை வழியில் பயணிக்காது சுயநல வழியை பின் பற்றப் போய் தமிழ் மக்களின் முதல் அணி என்கின்ற அந்தஸ்தை இழந்தமையினால் தான் நாம் மாற்று அணி ஆகியுள்ளோம்.

கொள்கை வழியில் பயணிக்க இன்னும் சில முதிர்ச்சி பெறாத கட்சிகள் இருக்கின்றன. அவை முதிர்ச்சியடையும் போது அவற்றிக்கும் மாற்று அணி என்று மக்கள் கூறக்கூடும். தற்போது அவர்கள் ஒரு மாற்று அணி அல்ல. முதிர்வை நோக்கி பயணிக்கும் முகப்பு நூல் முன்னனியினர்.

எனவேதான் தமிழ் மக்களின் நலன்களில் கூடிய அக்கறை கொண்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மீன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு நாம் கேட்கின்றோம்.

எதிர்வரும் தேர்தலில் மீன் சின்னத்திற்கு உங்களின் வாக்குகளை வழங்குவதன் மூலம் வலுவான ஒரு கட்சியாக நாம் மாற முடியும். மேலும் கூடிய உறுப்பினர் தொகையை கொண்ட ஒரு கட்சியாக பாராளுமன்றத்திலும் உலக அரங்கிலும் நாம் பரிணமிக்க முடியும் என்று கூறிக்கொள்ளுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன்,சிவசக்தி ஆனந்தன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் சட்டத்தரணி சிறிகாந்தா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment

Post Bottom Ad