மஹிந்தவின் கருத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவரான ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு சூழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் - ஜே.வி.பி. - News View

About Us

About Us

Breaking

Monday, June 29, 2020

மஹிந்தவின் கருத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவரான ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு சூழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் - ஜே.வி.பி.

(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியுள்ள நாடு எது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். நாட்டுக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ள கருத்து தொடர்பில் தேசிய பாதுகாப்பு குறித்து பொறுப்பு கூற வேண்டிய பிரதான நபரான ஜனாதிபதி அந்த சர்வதேச சூழ்ச்சிகள் குறித்து நாட்டு மக்களுக்கு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், சிம்பாபே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரொபட்ர் முகாபே அந்த நாட்டில் நீண்ட காலமாக சர்வாதிகார ஆட்சியையே முன்னெடுத்து வந்தார். எனினும் தேர்தல் காலம் நெருங்கும் போது நாட்டுக்கு சர்வதேச அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி மக்களை அச்சத்திற்குள்ளாக்கி வாக்குகளைப் பெற்றுக் கொள்வார். இதே பாணியைப் பயன்படுத்தியே அவர் சுமார் 30 வருடங்கள் ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். இந்த முறைமையையே தற்போது ராஜபக்ஷக்கள் பயன்படுத்துகின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிக்கையொன்றினை வெளியிட்டு அதில் இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

உண்மையில் அவ்வாறான அச்சுறுத்தல் இருக்கின்றதா இல்லையா என்பதை தேசிய பாதுகாப்பின் பிரதானியான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறில்லையேல் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பாரானால் அது சாதாரண விடயமல்ல.

கருணா அம்மான் பற்றிய விடயங்கள், கிரிக்கட் குறித்து தமது கட்சி வேட்பாளர் முன்வைத்த கருத்து, ஆறுமுகன் தொண்டமானுடைய இறுதி மரண சடங்கு என்பன சில்லறை விடயங்கள் என்றும் அவை பற்றி கவனத்தில் எடுக்க வேண்டாம் என்று பிரதமர் குறிப்பிட்டுகின்றார்.

3000 இராணுவ வீரர்களைக் கொள்வதும், தேசிய கிரிக்கட் வீரர்கள் பற்றி அரசாங்கமே அவதூறு பரப்புவதும், கொரோனா பரவல் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தை மீறி தொண்டமானுடைய இறுதி சடங்குகள் இடம்பெற்றமை பிரதமருக்கு சாதாரண விடயமாகியுள்ளது. இவற்றின் பாராதூரத் தன்மை குறித்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய பாதுகாப்பு குறித்து பிரதமர் முன்வைத்துள்ள கருத்துக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் செயலாளரும் பொறுப்பு கூற வேண்டும். தேர்தல் காலங்களில் அநாவசியமான விடயங்களைக் கூறி மக்களை அச்சத்திற்குள்ளாக்க முயற்சிக்கின்றனர். 

இலங்கையில் பொதுஜன பெரமுன ஆட்சி என்று கூட தற்போது கூற முடியாது. மாறாக தனி ராஜாபக்ஷக்களின் ஆட்சியே முன்னெடுக்கப்படுகிறது. அதிகளவான ஊழல், மோசடிக்காரர்களை தேர்தலில் களமிறக்கி குறைந்தளவான மோசடியில் ஈடுபட்டுள்ளோருக்கு வாக்களியுங்கள் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

ராஜபக்ஷக்கள் மாத்திரமின்றி ரணில், சஜித் தரப்பினருக்கும் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 5 வருடங்கள் ஆட்சியை வழங்கிய போதிலும் அவர்களால் மக்களுக்காக எந்த சேவையையும் ஆற்ற முடியவில்லை. இந்த இரு தரப்பினர்களும் பாராளுமன்றத்திற்கு தெரிவாவதற்கு தகுதியற்றவர்களாவர். எனவே ஆட்சியில் ஆரோக்கியமான புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு பலத்தை வழங்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment