ஆயிரம் ரூபா என்பது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது - கண்டி மாவட்ட வேட்பாளர் வேலுகுமார் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

ஆயிரம் ரூபா என்பது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது - கண்டி மாவட்ட வேட்பாளர் வேலுகுமார்

"கூட்டு ஒப்பந்தம் என்ற அடிமை சாசனத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொண்டு, மக்களிடம் சந்தா வசூலித்து - சமூகமாற்றத்தை தடுத்து - அரசியல் பிழைப்பு நடத்துவதற்காகவே ஆயிரம் ரூபா என்பது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றது." - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.

நாவலப்பிட்டிய பகுதியில் இன்று (28.06.2020) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். 

இது தொடர்பில் வேட்பாளர் வேலுகுமார் மேலும் கூறியதாவது, "1992 ஆம் ஆண்டுக்கு பிறகே கூட்டு ஒப்பந்த முறைமை அமுலுக்குவந்தது. வாழ்க்கைச்சுமைக்கேற்ப சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும் என்பதற்காகவே இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை அவ்வொப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

அதேபோல் தொழில்சார் உரிமைகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் இந்த நடைமுறை வெற்றியளித்துள்ளது. ஆனால், இலங்கையில் முழுமையாக தோல்வி கண்டுள்ளது என்றே கூறவேண்டும். தொழிலாளர்களுக்கான அந்த உடன்படிக்கை அடிமைசாசனம்போலவே பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

90 காலப்பகுதியில் இருந்து உரியவகையில் சம்பள அதிகரிப்பு இடம்பெற்றிருந்தால் இந்நேரம் ஆயிரத்தை தாண்டி சம்பளம் பெறுபவர்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இருந்திருப்பார்கள். ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அற்பசொற்ப சலுகைகளுக்காக கம்பனிகளிடம் சரணடைந்து, தொழிலாளர்களை அப்பட்டமாகக்காட்டிக்கொடுத்தன. எமது தொழிலாளர்களுக்கான தீர்வு கூட்டுஒப்பந்தம் அல்ல என்பது அனைத்து வழிகளிலும் இன்று உறுதியாகியுள்ளது.

எனவே, எமது ஆட்சியின்போது இதற்கு மாற்றுவழிமுறை தேடப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆயிரம் ரூபாவுக்கு அதிகம் வருமானம் உழைக்கும் வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுக்க கொள்கைகள் வகுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தொழிலாளர்களின் முன்னேற்றத்தை தடுத்து அவர்களை தொடர்ந்தும் மீளா வட்டத்துக்குள் வைத்துக்கொள்வதற்காகவே ஆயிரம் ரூபா, ஆயிரம் ரூபா என கூவித்திரிகின்றனர். ஆயிரம் ரூபாவை ஏற்பதன் ஊடாக கூட்டு ஒப்பந்ததம் நீடிக்கப்படவேண்டும் என்பதற்கு அங்கீகாரத்தையும் வழங்குகின்றனர்.

அதேபோல் ஆயிரம் ரூபா மட்டுமல்ல அதையும்தாண்டி எமது மலையக மக்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றையும் தேசிய மயப்படுத்தவேண்டும். அப்பணியை தடுப்பதற்கான சூழ்ச்சி அரசியலும் இந்த ஆயிரம் ரூபாவின் பின்னணியில் உள்ளது. எனவே, இந்த சமூகத்துக்கு சாபக்கேடாக இருக்கும், கறுப்பாடுகளுக்கு மக்கள் பாடம் புகட்டவேண்டும்." - என்றார்.

No comments:

Post a Comment