எம்.சி.சி. ஒப்பந்த விவகாரத்தை பொதுத் தேர்தல் பிரசாரமாக்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் - அத்துரலியே ரத்ன தேரர் - News View

Breaking

Post Top Ad

Saturday, June 27, 2020

எம்.சி.சி. ஒப்பந்த விவகாரத்தை பொதுத் தேர்தல் பிரசாரமாக்குவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் - அத்துரலியே ரத்ன தேரர்

(இராஜதுரை ஹஷான்)

பொதுத் தேர்தலில் எம்.சி.சி ஒப்பந்தத்தை தேர்தல் பிரச்சாரமாக்குவதை ஆளும் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை ஜனாதிபதி மற்றும் பிரதமர் நாட்டு மக்களுக்கு பொதுத் தேர்தலுக்கு முன் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பல பொய்யாக்கப்பட்டுள்ளதை பெரும்பான்மையினை மக்கள் தற்போது உணர்ந்துள்ளார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுபல சேனா அமைப்புடன் இணைந்து 20 தேர்தல் மாவட்ட தொகுதிகளில் போட்டியிடவுள்ளோம். புதிய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை தீர்மானிக்கும் பலம் எமது கட்சிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தேசிய உற்பத்தி, பௌத்த மத கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்ந்த குழுவினர் ஒப்பந்தத்தின் மீளாய்வு அறிக்கையினை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளார்கள். நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட மாட்டோம் என்று குறிப்பிட்டே பொதுஜன பெரமுன ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல், எம்.சி.சி ஒப்பந்தம் ஆகியவை தேர்தல் பிரசார மேடைகளில் பிரதான பேசுபொருளாக காணப்பட்டது.

எம்.சி.சி ஒப்பந்தத்தை ஆளும் தரப்பினர் பொதுத் தேர்தலின் பிரச்சாரமாக்காமல் ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மை நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது. வாக்குறுதிகளினால் ஏமாற்றப்பட்டதை பெரும்பாலான மக்கள் தற்போது நன்கு உணர்ந்து கொண்டார்கள்.

தனி சிங்கள பௌத்த மக்களின் ஆதரவில் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றியதா என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் உள்ளது. 

இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக அமைய வேண்டும். பிரதமர் பதவியை தீர்மானிக்கும் பலத்தை பெறும் வழியை முறையாக பொதுபல செனா அமைப்புடன் இணைந்து வகுத்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad