மனித உரிமை ஆர்வலரின் வளர்ப்பு நாய் சுட்டுக் கொலை ! - News View

About Us

About Us

Breaking

Thursday, May 7, 2020

மனித உரிமை ஆர்வலரின் வளர்ப்பு நாய் சுட்டுக் கொலை !

மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்னாண்டோவின் வீட்டில் வளர்க்கப்படும் ‘மெக்ஸ்’ (MAX) என்ற நாய் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது. 

நீர்கொழும்பு பெரியமுல்லை, புனித அந்தோனியார் வீதியில் உள்ள அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட நாயே இவ்வாறு இன்று (07.05.2020) காலை 6.00 மணியளவில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பில், மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவிக்கையில், எனது வீட்டில் இரண்டு நாய்கள் வளர்க்கப்படுகின்றன. அதில் மெக்ஸ் என்று செல்லப் பெயரில் அழைக்கப்படும் நாயை காலை ஆறு மணியளவில் வெளியில் செல்ல அனுமதித்தேன். 

பின்னர் ஐந்து நிமிட நேரத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. நான் வீதிக்கு வந்து பார்த்தபோது, எனது நாய் இரத்தக் காயங்களுடன் தடுமாறியவாறு வருவதை அவதானித்தேன். பின்னர் எனது வீட்டின் முன்பாக வீதியில் வீழ்ந்து உயிரிழந்து விட்டது. 
எமது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரையே நான் இது தொடர்பாக சந்தேகிக்கிறேன். அவரது வீட்டின் முன்பாகவே நாய் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. 

உடனடியாக இது தொடர்பாக 119 பொலிஸ் அவசர இலக்கத்துக்கு அறிவித்தேன். இந்த வீதியில் யாரிடம் துப்பாக்கி உள்ளதென்பதை ஆராய வேண்டும் என தெரிவித்தார். 

சம்பவத்தையடுத்து நீர்கொழும்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காட்சிகளையும் பொலிஸார் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இதேவைளை, பிரிட்டோ பெர்னாண்டோ, சந்தேகிக்கும் பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்கு முன்பாக உள்ள வீடொன்றின் மதிலில், துப்பாக்கி சன்னம்பட்டு சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment