என்னை பதவி நீக்கும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு இல்லை, அரசியல் அழுத்தங்களையும் பிரயோகிக்கின்றனர் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் - News View

Breaking

Post Top Ad

Monday, May 18, 2020

என்னை பதவி நீக்கும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு இல்லை, அரசியல் அழுத்தங்களையும் பிரயோகிக்கின்றனர் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்

(ஆர்.யசி) 

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து என்னை பதவி நீக்கும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு கிடையாது. எனினும் அரசியல் ரீதியான பல்வேறு அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றேன் என்கிறார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல். 

நீதிமன்றத்தில் நான் வாய்திறக்கக் கூடாது என்பதற்காகவே தன்னை இலக்குவைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவுவதாகவும், பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார் எனவும் ஆளும் தரப்பு குற்றம் சுமத்தி வருவதுடன், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் கூறுகின்றனர். 

இந்நிலையில் அவரது நிலைப்பாடு என்னவென வினவிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம் பாராளுமன்றத்தை சார்ந்தது. எம்மை நியமித்த பாராளுமன்றத்தினாலேயே எமது பதவியை நீக்கவும் முடியும். அவ்வாறு இருக்கையில் அரசியல்வாதிகள் கூறும் காரணிகளுக்காக எனது பதவியை பறிக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. 

இப்போது தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என கூறியுள்ள நிலையிலும் தயாசிறி ஜெயசேகர போன்றவர்கள் யாழ் கச்சேரியில் அலுவலகம் திறந்து பிரசாரங்களை செய்தமையும் அதற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் எடுத்து நிறுத்தியதில் இருந்து தான் அவர்கள் என்னை இலக்கு வைத்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

தமிழ் தேசிய கூட்டமைப்பை நான் ஆதரித்து செயற்படுவதாகவும் கூறுகின்றனர். சுயநலம் கொண்ட அரசியல் கொள்கையில் இருப்பவர்கள் சுயாதீனமாக இயங்கும் எம்மை சாடுவது கண்டனத்திற்குரியது. 

எவ்வாறு இருப்பினும் தேர்தலை நடத்துவது குறித்து இப்போது நீதிமன்றத்தில் தீர்ப்பொன்றை எதிர்பார்த்துள்ள நிலையில் நான் நீதிமன்றத்தில் வாய் திறக்கக் கூடாது என்பதற்காகவே என் மீதான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது. நாம் எப்போதும் சட்டத்தை மதித்து சுயாதீனமாக செயற்படும் நபர்கள். அவ்வாறு இருக்கையில் எமக்கு எதிராக அரசியல் அழுத்தங்கள் பிரயோக்கிப்படுவது மிகத்தவறான செயற்பாடாகும். 

மேலும் ஆணைக்குழுவிற்குள் குழப்பங்கள் இருப்பதாக கூறும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானதாகும். தேர்தல் நடத்துவது குறித்து கலந்துரையாடப்படுகின்றது. அதன்போது வெவ்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் இறுதியாக மூவரும் ஒரு நிலைப்பாட்டில் இருந்து ஒரு தீர்மானம் எடுப்பதே வழக்கமாக கொண்டுள்ளோம். இது ஆணைக்குழுவில் நடக்கும் செயற்பாடாகும். இதனை அரசியல் நோக்கங்களுக்காக எவரும் கையில் எடுக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad