பொதுத் தேர்தல் தொடர்பிலான மனு பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு - இன்று மன்றில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் - News View

Breaking

Post Top Ad

Monday, May 18, 2020

பொதுத் தேர்தல் தொடர்பிலான மனு பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு - இன்று மன்றில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்

ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் ஜனாதிபதியினால் மார்ச் மாதம் முதலாம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மனுக்களின் பரீசீலனை நாளை (19) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இம்மனுக்கள் மீதான விசாரணை இன்று (18) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் புவனேக அலுவிகாரே,சிசிர அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த மனுக்கள் இன்றும் (18) நாளையும் (19) எடுத்துக் கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, நாளை காலை 10.00 மணிக்கு மீண்டும் இம்மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் குழாம் அறிவித்தது.

இது தொடர்பான முதலாவது மனு சட்டத்தரணி சரித்த குணரத்னவினால் தாக்கல் செய்யப்பட்டதோடு, தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, பாட்டலி சம்பிக்க ரணவக, குமார வெல்கம, உள்ளிட்டோரால் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனத.

இதில் தேர்தல் ஆணைக்குழு, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோர் இதில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

மன்றில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்

மனுதாரர்கள் விக்டர் ஐவன் மற்றும் சரித்த குணரத்ன சார்பில் சமர்ப்பிப்புகளை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ஜனநாயகத்தை நிலைநாட்ட நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கம், நீதிமன்றம் ஆகிய மூன்றும் அத்தியாவசியமாகும். இந்த மூன்று உறுப்புகளும் முக்காலியின் மூன்று கால்கள் போன்றவை. ஒன்று விழுந்தால் அனைத்தும் சரிந்து விடும் என அவர் இதன்போது வாதிட்டார். பாராளுமன்றம் இல்லாத நாடொன்றில் ஜனநாயகம் இருக்காது என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதியின் பிரகடனம் தற்போது செல்லுபடியற்றதாகியுள்ளதாக தெரிவித்த அவர், பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கான அதிகாரமானது, அது கலைக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்பதற்கு அமைவானது என, அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தேர்தலுக்கான திகதிகள் மற்றும் பாராளுமன்றத்தை கூட்டும் தினம் ஆகியன அப்பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதற்கமைய அவை இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், பல சட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததன் காரணமாக, எந்த வகையிலும் ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என சுமந்திரன் தெரிவித்ததோடு, பாராளுமன்றத் தேர்தல் சட்டத்திற்கு அமைய, வாக்களிப்பு திகதிக்கு முன்னர் குறைந்தது ஐந்து வாரங்களாவது பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் ஆரம்ப ஆட்சேபனைகளை தெரிவித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக டி சில்வா, அடிப்படை உரிமை மனுக்களுக்கான கால அவகாசத்தை இம்மனுக்கள் பூர்த்தி செய்யாததால் இம்மனுக்களை தொடர முடியாது என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் செயல்பாடுகள் தொடர்பில் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், ஒரு மனுவில், மனுதாரர் ஜனாதிபதியை பிரதிவாதியாக மேற்கோள் காட்டத் தவறிவிட்டார் என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தனது ஆட்சேபனையில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad