டென்மார்க் நாட்டில் பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்பு கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

டென்மார்க் நாட்டில் பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்பு கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பு

டென்மார்க் நாட்டில் பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்பு கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி முதல் கடந்த ஏப்ரல் 14ம் திகதி வரை ஐரோப்பிய நாடான டென்மார்க் ஊரடங்கை அமுல்படுத்தியது.

எனினும் ஊரடங்கை சில முக்கிய நிபந்தனைகளுடன் கடந்த மாதம் 15ம் திகதி முதல் தளர்த்தியது.

அன்று மழலையர் மற்றும் தொடக்க நிலை பாடசாலைகளும் திறக்கப்பட்டன. சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் உட்கார வைக்கப்பட்டனர்.

குழந்தைகளுக்கும், சிறார்களுக்கும் கொரோனா வைரஸ் எளிதில் தொற்றாது என்று வெளியான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இப்படி பாடசாலைகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் பாடசாலைகள் திறந்த பின்பு கொரோனாவின் தாக்கம் எப்படி உள்ளது என்பது பற்றி அந்நாட்டின் தேசிய சீரம் இன்ஸ்டிடியூட் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

அப்போது பாடசாலைகள் திறப்புக்கு பின்பு, ஊரடங்கு காலத்தில் இருந்ததை விட கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகமாகி இருப்பது தெரியவந்தது.

அதாவது, அந்நாட்டில் ஒருவர் வைரசை பரப்பும் சதவீதம் 0.6-ல் இருந்து 0.9 சதவீதமாக உயர்ந்து இருந்தது.

கொரோனா தாக்கத் தொடங்கியது முதல் பாடசாலைகள் திறக்கப்படும் முன்பு வரை டென்மார்க் நாட்டில் 6,670 பேர் பாதிக்கப்பட்டும் 300 பேர் உயிரிழந்தும் இருந்தனர்.

ஆனால் பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட 15 நாட்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் 2,630 பேர் பாதிக்கப்பட்டும், 160 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இது 0.3 சதவீத உயர்வு ஆகும்.

இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கூறும்போது, “வைரஸ் தொற்றை ஒருவர் பரப்பும் விகிதம் டென்மார்க்கில் சற்று அதிகரித்து இருப்பது உண்மைதான். இதனால் யாரும் பயப்பட வேண்டியதில்லை. அதேநேரம் இது 1.0 என்ற நிலையை கடந்து விடக்கூடாது. அப்படி அதிகரித்தால் நிலைமை கவலை அளிப்பதாக மாறும்” என்றனர்.

டென்மார்க்கில் பாடசாலைகள் திறப்புக்கு பின்பு கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து இருப்பது சில ஐரோப்பிய நாடுகளை பெரிதும் யோசிக்க வைத்து இருக்கிறது. இதனால் பாடசாலைகள் திறப்பை இன்னும் ஓரிரு மாதங்கள் வரை தள்ளிப்போடலாமா? என்பது குறித்து அவை சிந்தித்து வருகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad