மனித உரிமை செயற்பாட்டாளரின் வளர்ப்பு நாயை சுட்டுக் கொன்ற முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கைது ! நடந்தது என்ன ? - News View

About Us

About Us

Breaking

Thursday, May 7, 2020

மனித உரிமை செயற்பாட்டாளரின் வளர்ப்பு நாயை சுட்டுக் கொன்ற முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கைது ! நடந்தது என்ன ?

(எம்.எப்.எம்.பஸீர்) 

பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், காணாமல் போனோர் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டொ பெர்னாண்டோவின் 10 வயதுடைய வள்ர்ப்பு நாய் இன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது. 

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின், பெரியமுல்லை, புனித அந்தோனியார் வீதியில் அமைந்துள்ள பிரிட்டொ பெர்னாண்டோவின் வீட்டில் வளர்க்கப்பட்ட மெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள வளர்ப்பு நாயே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. 

இன்று காலை குறித்த வளர்ப்பு நாய், வழமைபோன்று காலை வேளையில், வீட்டுக்கு வெளியே புனித அந்தோனியார் ஆலய வீதியில் உலாவச் சென்ற வேளை அடையாளம் தெரியாத ஒருவர் நாய் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளார். இதனையடுத்து சூட்டுக் காயத்துடன் தனது எஜமான் வீட்டுக்கே ஓடி வந்துள்ள அந்த நாய், அங்கு சுருண்டு வீழ்ந்து உயிரிழந்துள்ளது. 
இதனையடுத்து இது குறித்து நீர் கொழும்பு பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் தலைமையிலான பொலிஸ் குழு அங்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

'நாம் இரு நாய்களை வளர்க்கின்ரோம். இது மெக்ஸ், நான் மூத்த பிள்ளை என்றே அழைப்பேன். 10 வருடங்களாக இருக்கின்றன. வழமை போன்றே காலை பாதையில் உலாத்தச் சென்றது. அப்போது எனக்கு ஒரு துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டது. நான் வாயிலை நோக்கி வரும் போதும், துடி துடித்து ஓடி வந்த எனது செல்லப் பிரணி, வீட்டின் முற்றத்தில் அப்படியே சுருண்டு விழுந்து இறந்தது. அருகே சென்ற போது அதன் உடலில் இருந்து இரத்தம் வடிவதை அவதானித்தேன். அதன் பின்னரே பொலிஸாருக்கு கூறினேன்.' என பொலிஸாரிடம் குறித்த நாயை வளர்த்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாண்டோ வாக்கு மூலம் அளித்துள்ளார். 

இதனையடுத்து குறித்த பகுதியில் வீடுகளில் இருந்து சி.சி.ரி.வி. காணொளி பதிவுகளை சேகரித்துள்ள பொலிஸார், அதனை மையப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்த நிலையில், வளர்ப்பு நாயின் உடலில் இருந்த காயத்தின் அடிப்படையில், நாயைக் கொலை செய்ய வாயு ரைபிள் பயன்படுத்திள்ளதாக பொலிஸார் சந்தேகித்தனர். 
இந்நிலையில் அது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இன்று நண்பகல் ஆகும் போது, மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டொ பெர்னாண்டோவின் வீட்டுக்கு அருகே, அதே வீதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கிளமன் பெர்னாண்டோவை சந்தேகத்தில் கைது செய்தனர். 

அவரை பொலிஸார் கைது செய்த போதும், தனக்கும் அந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பொலிஸ் வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார். 

எனினும் அறிவியல் ரீதியிலான தடயங்களை மையப்படுத்தி இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். வாயு ரைபிள் கொண்டு நாயை சுட்டுக் கொலைச் செய்தமை தொடர்பிலான சந்தேகத்தில் அவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்தனர். 
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கிளமன் பெர்னாண்டோ, இன்று பிற்பகல் வேளையில் நீர்கொழும்பு பதில் நீதிவான் பிரிமல் அமரசிங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை 5 இலட்சம் ரூபா பொறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதித்துள்ளார். இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. 

இதனிடையே, கடந்த 2019 ஆம் ஆண்டி ஜனவரி மாதம் நீர்கொழும்பு - தோப்புவ பகுதியில் சார்லி எனும் வளர்ப்பு நாய் கூண்டோடு எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, வளர்ப்பு நாய்களை கொடூரமாக கொலை செய்த பல சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. 

அதன்படி குறித்த சம்பவம் இன்று பதிவான மெக்ஸ் எனும் வளர்ப்பு நாயின் கொலை வரை 27 சம்பவங்கள் இவ்வாறு பதிவாகியுள்ளதாக பிராணிகளின் உரிமைகள் தொடர்பிலான அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment