பெரும்பான்மைச் சமூகத்திடையே எம்மை எதிரிகளாக காட்டுவதற்காக சில தீய சக்திகள் முனைந்து கொண்டிருக்கின்றன : சட்டத்தை மதித்து பெருநாள் கொண்டாடுவோம் - எச்.எம்.எம். ஹரீஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 23, 2020

பெரும்பான்மைச் சமூகத்திடையே எம்மை எதிரிகளாக காட்டுவதற்காக சில தீய சக்திகள் முனைந்து கொண்டிருக்கின்றன : சட்டத்தை மதித்து பெருநாள் கொண்டாடுவோம் - எச்.எம்.எம். ஹரீஸ்

அல்லாஹ்விற்காக நோன்பு நோற்ற நாம் தியாகத்தை உணர்ந்து இம்முறை நோன்புப் பெருநாளை நாட்டு மக்களின் நன்மை கருதி, நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து எமது வீடுகளிலேயே எளிமையான முறையில் கொண்டாட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தொடர்ந்தும், சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று தாக்கமானது எமது நாட்டிலும் இதுவரை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படாத நிலையே காணப்படுகிறது. கொரோனாவின் தாக்காத்தினால் ஐவேளை தொழுகைகள் கூட இடம்பெறாத வண்ணம் பள்ளிவாசல்கள் மூடப்பட்டு அதான் ஒலிக்க மாத்திரமே பள்ளிவாசல்கள் திறக்கப்படுகிறது.

கடமையான ஐவேளை தொழுகைகளை பள்ளிவாசல்களுக்கு சென்று இமாம் ஜமாத்துடன் தொழுது கொள்ள முடியாமல் கவலையடைகின்றோம். அது மாத்திரமல்லாமல் ரமழானில் கூட்டாக நிறைவேற்றுகின்ற தராவீஹ், கியாமுல் லைல் போன்ற தொழுகைகளையும் தொழ முடியாமல் தவிக்கும் நிலைக்கும் ஆளாகியும் உள்ளோம்.

தமிழ், சிங்கள புத்தாண்டு மற்றும் வெசாக் பண்டிகைகளை எளிமையான முறையில் பெரும்பான்மை இன சமூகம் கொண்டாடியதை ஊடகங்கள் அண்மைக்காலங்களில் பேசுபொருளாக்கியிருந்தன. நாட்டின் சட்டதிட்டங்களிற்கு மதித்து தம் கொண்டாட்டங்களை வீடுகளிலேயே கொண்டாடியிருந்ததாக செய்திகளையும் அவ் ஊடகங்கள் வெளியிட்டது.

பெரும்பான்மைச் சமூகத்திடையே எம்மை எதிரிகளாக காட்டுவதற்காக சில தீய சக்திகள் முனைந்து கொண்டிருக்கின்றன. நாம் புத்தாடைகளை கொள்வனவு செய்து சட்டத்தை மீறி பெருநாள் கொண்டாடுவதாக இனவாத ஊடகங்கள் பெரும்பான்மை மக்களிடையே விமர்சனமாக கொண்டு சேர்த்து விடுவார்கள். அது மேலும் எமது சமூகத்தின் மீது பழி போடும் செயலாக மாறிவிடும்.என்பதை நாம் அறிந்து நடக்க வேண்டும்.

நமது நாட்டில் சுகாதார தரப்பினால் கொரோனா வைரஸினை ஒழிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் இச் சந்தர்ப்பங்களில் நாமும் அதற்கான முழு ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும். பெருநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு முஸ்லிங்கள் கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் வரவிடாமல் தடுத்தார்கள் என்ற பழி சொல்லை சுமக்க கூடியவர்களாக நாம் மாறிவிடக் கூடாது என்று கேட்டு கொள்கிறேன்.

ஊடரங்கு தளர்த்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் நாம் கெளரவமாக நடந்து கொள்ள வேண்டும். முஸ்லிங்கள் ஏனைய சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். அதுவே எமது மார்க்கமும் கற்றுத் தந்திருக்கிறது. பெருநாள் தினத்தன்று நாட்டின் நிலை, நம் சக சகோதரர்களின் வறுமையை கவனத்தில் கொண்டு பெருநாளை எளிமையாக கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment