பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் வர்த்தமானி அதிகாரம் மிக்கதே - நீதிமன்றத்தில் வாதிட்டார் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Thursday, May 21, 2020

பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் வர்த்தமானி அதிகாரம் மிக்கதே - நீதிமன்றத்தில் வாதிட்டார் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா

(எம்.எப்.எம்.பஸீர்) 

எட்டாவது பாராளுமன்றத்தை கலைத்து கடந்த மார்ச் 2 ஆம் திகதி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்ட ரீதியானதே எனவும் அதற்கு இன்னும் சட்ட ரீதியிலான அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நேற்று உயர் நீதிமன்றில் வாதிட்டார். 

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேற்று 4 ஆவது நாளாக பரிசீலனைக்கு வந்த போதே, மனுக்களில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர சார்பில் வாதங்களை முன்வைத்து அவர் இதனை தெளிவுபடுத்தினார். 

நேற்றைய தினமும் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையானது, பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்றத்தின் 501 ஆம் இலக்க அறையான உயர் நீதிமன்ற சம்பிரதாய அமர்வு நிகழ்வுகள் மண்டப அறையில் பரிசீலனைக்கு வந்தன. 

இதன்போது வாதங்களை ஆரம்பித்த ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, அரசியலமைப்பின் 62(2) ஆம் உறுப்புரை பிரகாரம் பாராளுமன்றத்தை இரு வழிகளில் கலைக்க முடியும். பாராளுமன்றின் பதவிக் காலம் அதாவது 5 வருடம் பூர்த்தியாவதன் ஊடாக பாராளுமன்றம் கலையும். அடுத்தது பாராளுமன்றம் நாலரை வருடங்களை பூர்த்தி செய்ததன் பின்னர் ஜனாதிபதியால் அதனை கலைக்க முடியும். ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் கீழேயே அந்த பாராளுமன்ற கலைப்பு விடயம் முன்னெடுக்கப்படுகின்றது. 

அரசியலமைப்பின் 70 (5) அ உறுப்புரைக்கு அமைய, பாராளுமன்றம் கலைப்பின் பின்னர் பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி கலைக்கப்படும் திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என வாதிடப்படுகின்றது. இது அடிப்படையற்றது. 

பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பில் அரசியலமைப்பில் உள்ள விதி விதாங்கள் பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்துடன் சேர்த்து பார்க்கப்பட வேண்டியவை. அவ்வாறு பார்த்தால், தேர்தல் ஆணைக்குழு எப்படி ஜூன் 20 ஆம் திகதி எனும் திகதியை நிர்ணயித்தது என தெரியும். 

அதாவது அரசியலமைப்பின் 70 (5) ஆம் உறுப்புரைக்கு அமைய பாராளுமன்ற கலைப்பின் போது மூன்று மாதங்களுக்கு உட்பட்ட தேர்தல் திகதி ஒன்றினை குறிப்பிட வேண்டியது அவசியம்தான். அதனைத்தான் ஜனாதிபதி மார்ச் 2 ஆம் திகதி வர்த்தமானியில் ஏப்ரல் 25 என குறிப்பிட்டிருந்தார். எனினும் இந்த வர்த்தமானி அறிவித்தலுடன், தேர்தல்கள் குறித்து முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சென்று விடுகின்றது. 

பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 10, 24 (3) ஆம் அத்தியாயங்களை பாருங்கள். அரசியலமைப்பில் உள்ள தேர்தல் நடாத்துதல் குறித்த அதிகாரங்கள் பொதுத் தேர்தல் சட்டத்தின் 10 ஆம் அத்தியாயம் ஊடாக ஆணைக்குழுக்கு கிடைக்கின்றது. அது அரசியலமைப்பின் 70 (5) ஆம் உறுப்புரை பிரகாரம் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவாகும். 

இங்கு ஜனாதிபதிக்கே 3 மாதங்களுக்குள் தேர்தல் திகதியை குறிப்பிட வேண்டும் என அரசியலமைப்பு சொல்கிறது. அந்த அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கைகலுக்கு செல்லும் போது அங்கு பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதி நிர்ணயித்த திகதியை ஏதேனும் காரணத்துக்காக மாற்றும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது. அவ்வாறு ஆணைக்குழு மீள திகதியை குறிக்கும் போது, அது எத்தனை நாட்கள், மாதங்கள் என்ற கட்டுப்பாடுகள் அல்லது எல்லை சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. 

எனவே ஜனாதிபதி சட்டத்துக்கு உட்பட்டே பாராளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தலை பிறப்பித்தார். அது தற்போதும் சட்ட அதிகாரம் உள்ளதே. அதற்கு உட்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல்கள் சட்டத்துக்கு அமைய எடுத்துள்ள முடிவுகளும் சரியானவையே. சட்ட ரீதியிலானவையே. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. 

இங்கு மனுக்களை தாக்கல் செய்துள்ளோரை பாருங்கள். யானை சின்னத்தில் போட்டி போடுபவர்கள், த.தே.கூ., மக்கள் விடுதலை முன்னனி, ஸ்ரீ.சு.க., எஸ்.எல்.பி.பி. போன்ற எந்த கட்சியும் இங்கு ஜனாதிபதியின் கலைப்பு வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் சிலரே இங்கு வந்துள்ளனர். அவர்களுக்கு அரசியல் ரீதியிலான தேவை இருக்கின்றது. அதனாலேயே இவ்வாறு நீதிமன்றை ஏமாற்றி அதனை அடைய முயல்கின்றனர். 

பாராளுமன்றம் இயங்காமல் நாடு எவ்வளவு காலத்துக்கு இயங்கலாம் என்று எந்த கால எல்லையும் அரசியலமைப்பில் இல்லை. எனவே எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் பாராளுமன்றம் இல்லாமல் அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியும். பாராளுமன்றத்தின் வேலை சட்டவாக்கம்தான். சட்ட வாக்கத்தின் தேவை இல்லாத போது எதற்காக பாரளுமன்றத்தை கூட்ட வேண்டும். அதுவும் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை எந்த வகையிலும் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை. 

உண்மையில் இங்கு மனுக்களை தாக்கல் செய்துள்ள பலரும் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பினர். அதில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீள கூட்டுமாறும் அவ்வாறு கூட்டினால் பாராளுமன்றத்துக்குள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு தந்து ஒன்றாகச் செயற்பட தயார் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. 

உண்மையில் இதனை விளங்கும் மொழியில் கூறினால் ஒரு டீல் பேசப்பட்டது. அப்படியானால் மக்களின் உரிமை, அவர்களின் இறையான்மையை ஏமாற்றுவதாக அது அமையும் அல்லவா. அதற்கு ஜனாதிபதி மறுப்புத் தெரிவித்ததால், எந்த அடிப்படை உரிமையும் மீறப்பட்டிராத மக்களின் இறையாண்மையை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை எதிராக மிகக் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டு மனுதாரர்கள் மன்றில் மனுக்களை முன்வைத்துள்ளனர். 

அரசியலமைப்பின் 70 (7) ஆம் உறுப்புரைக்கு அமைய நாட்டில் அவசர நிலைமை ஒன்று ஏற்படுமாயின் அதனை கையாள கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீள அழைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. தற்போதைய கொவிட் பரவல் நிலையை மையப்படுத்தி அதனையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உண்மையில் நாட்டில் தர்போது அவச நிலைமை ஒன்று இல்லை. 

அதாவது அரசியலமைப்பின் 70 (7) ஆம் உறுப்புரையில் கூறப்படும் அவசர அல்லது நெருக்கடி நிலைமை என்றால் என்ன? முதலில் அதனை தெளிவுபடுத்த வேண்டும். ஒரு சூழ்நிலையை கையாள புதிதாக சட்டங்கள் அல்லது சட்ட திருத்தங்கள் அவசியமாகின்ற போது, அப்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தால் அந்த சட்டவாக்க தேவைக்காக பாராளுமன்றத்தை கூட்டுவதையே குறித்த அரசியலமைப்பின் உறுப்புரை அவசர நிலையாக கூருகின்றது. 

தற்போதைய சூழலில் அப்படியான தேவை ஜனாதிபதிக்கு இல்லை. கொவிட் 19 ஐ வெற்றிகரமாக எம்மிடம் உள்ள தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்துக்கு அமைய அவர் கட்டுப்படுத்தி காட்டிவிட்டார். எனவே இங்கு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீள கூட்ட வேண்டிய எந்த தேவையும் இல்லை. 

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்கு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்துக்கு அமைய, தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றிடம் வியாக்கியானம் கோராமை தொடர்பிலும் குற்றம் சுமத்துகின்றனர். அது ஜனாதிபதியின் அதிகாரம் சார்ந்த விவகார, தெளிவான சட்ட திட்டங்கள் இருக்கையில் வீணாக உயர் நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கேட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்க ஜனாதிபதி விரும்பவில்லை. 

இதனைவிட தேர்தலுக்கான வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட கடந்த மார்ச் 17,18,19 ஆம் திகதிகள் பொது விடுமுறை தினங்கள் எனவும் அதில் வேட்பு மனுக்களை ஏற்றமை தவறு என்றும் கூறுகின்றனர். அது ஆணைக்குழுவின் வேலை. 

எனினும் அது குறித்தும் நான் தெளிவுபடுத்துகின்றேன். அதில் எந்த தவறும் இல்லை. சட்டத்தின் பிரகாரம், வாக்களிப்பு தினமே விடுமுறை தினத்தில் அமையக்கூடாது. அதுவும் ஜனாதிபதி அரசியலமைப்பின் 70 (5) உறுப்புரை பிரகாரம் நிர்ணயித்த திகதி, பின்னர் ஏதேனும் காரணத்துக்காக விடுமுறை தினமாக மாற்றப்பட்டால் கூட அந்த திகதியில் தேர்தலை நடாத்தலாம். அப்படி இருக்கையில் வேட்பு மனுக்கலை விடுமுறை தினத்தில் ஏற்கக்கூடாது என எங்கும் இல்லை. 

அடுத்த விடயம், பொது நிதிப் பயன்பாடு தொடர்பிலானது நாட்டின் பகிரங்க நிதிகள் மீதான பூரண கட்டுப்பாடு பாராளுமன்றத்துக்கே உள்ளது. அரசியலமைப்பின் 148 ஆம் சரத்தின் பிரகாரம் அந்த அதிகாரம் பாராளுமன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 150 ஆம் சரத்தின் கீழ் உள்ள உறுப்புரைகளுக்கு அமைய திரட்டு நிதியத்திலிருந்து ஜனாதிபதி செலவினங்களை முன்னெடுப்பதற்குரிய நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

பகிரங்க சேவைகளுக்கு (பொதுச் சேவைகளுக்கு) திரட்டு நிதியத்திலிருந்து செலவு செய்யலாம். இதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. பொதுச் சேவை அல்லது பகிரங்க சேவைக்கு பயன்படுத்த முடியும் என்பதை, அரச ஊழியர்களின் சம்பளம் வழங்க மட்டும் என நிர்ணயம் செய்யக்கூடாது. அதற்கான அர்த்தம் பரந்தது.' என வாதிட்டார். 

நேற்றைய தினம் முழுதும் அவரது வாதங்கள் இடம்பெற்ற போதும் அது முடிவுக்கு வரவில்லை. இன்றும் அவரது வாதங்கள் தொடரவுள்ளன. அதனையடுத்து சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் இந்திகா தேமுனி டி சில்வா வாதிடவுள்ளார்.

No comments:

Post a Comment