அரசியலமைப்பு சார்ந்த விடயங்கள் தொடர்பில் மூன்று தரப்புக்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 6, 2020

அரசியலமைப்பு சார்ந்த விடயங்கள் தொடர்பில் மூன்று தரப்புக்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

தேர்தலை நடத்துதல், பாராளுமன்றத்தை மீளக் கூட்டுதல், வேட்புமனுக்களை விடுமுறை நாட்களில் ஏற்றுக் கொண்டமை, நிதி அதிகாரம் உள்ளிட்ட அரசியலமைப்பு சார்ந்த சில விடயங்கள் தொடர்பில் வாதப் பிரதிவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பிரச்சினைகள் தற்போது உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்தார்.

ஜுன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்த வர்த்தமானி மற்றும் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி மார்ச் மாதம் 2 ஆம் திகதி விடுத்த வர்த்தமானி ஆகியவற்றை செல்லுபடியற்றதாக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைய, தற்போதைய அரசாங்கம் நிதியை செலவிடுவதற்கு உள்ள அதிகாரம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு மட்டுப்படுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அரச நிதி செலவிடப்படுகின்றமை அரசியலமைப்பிற்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ள, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, அவ்வாறு செயற்பட்டதன் மூலம் அரசாங்கம் தனதும் நாட்டு மக்களினதும் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகக் கூறியுள்ளார்.

சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரன ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அடிப்படை உரிமை மனுவில், ஜனாதிபதி சார்பில் சட்ட மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜுன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வர்த்தமானி அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணானது என அறிவித்து அதனை தள்ளுபடி செய்யுமாறு கோரி சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் உள்ளிட்ட ஏழு பேர் மற்றுமொரு அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள் மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு பாராளுமன்றம் மூன்று மாதங்களுக்குள் மீண்டும் கூட்டப்படாமை மக்களின் இறைமையை மீறுவதாகவே அமையும் என்பதே மனுதாரர்களின் நிலைப்பாடாகும்.

இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், அதன் உறுப்பினர்கள், சட்ட மா அதிபர் உள்ளிட்டவர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொதுத் தேர்தல் நடத்தப்படுவதை இரத்து செய்யுமாறு கோரி மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையமும் உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தது.

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவது அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad