அரசாங்கம் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய தருணத்தில் அவர்களது பணத்தை கொள்ளையிடுகின்றது - News View

About Us

About Us

Breaking

Monday, May 18, 2020

அரசாங்கம் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய தருணத்தில் அவர்களது பணத்தை கொள்ளையிடுகின்றது

(செ.தேன்மொழி) 

அரசாங்கம் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய தருணத்தில் அவர்களது பணத்தை கொள்ளையிட்டு வருவதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் செயற்பாடு எதிர்வரும் தரப்பினருக்கு தவறான அபிப்பிராயத்தை தோற்றுவிப்பதாக அமையப் பெற்றுள்ளதாகவும் கூறினார். 

ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 வைரஸ் பரவலின் காரணமாக மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறான நிலையில் அரசாங்கம் மக்களுக்கு சலுகையை பெற்றுக்கொடுக்க முயற்சிக்காமல் அவர்களிடம் கொள்ளையடித்து வருகின்றது. 

உலக சந்தையில் எரிபொருளின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை 15 அல்லது 20 டொலர் என்ற மட்டத்திற்கு குறைந்துள்ளது. 

நல்லாட்சி அரசாங்கத்தில் பெற்றோல் பீப்பாய் ஒன்று 68 டொலர்க்கே கொள்வனவு செய்யப்பட்டது. அதனால் அக்காலப்பகுதியில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 137 ரூபாவாகவும், ஒரு லீற்றர் டீசலின் விலையை 107 ரூபாவாகவும், மண்ணெண்னை லீற்றர் 70 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

தற்போது எரிப்பொருளின் விலையின் வீழ்ச்சி காரணமாக ஒரு லீற்றர் பெற்றோலை 32 - 35 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் டீசலை 34 - 35 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் மண்ணெண்னையை 25 ரூபாவுக்கும் விநியோகிக்க முடியும். 

இந்நிலையில் தற்போது இருக்கும் விலையையும் விட ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 5 ரூபாவால் ஐ.ஓ.சி. நிறுவனம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை அரசாங்கம் வைத்துக்கொண்டு மக்களுக்கு எந்தவிதமான சலுகையையும் பெற்றுக் கொடுக்காமல் இருக்கின்றது. 

இதேவேளை பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் ஜனாதிபதிக்கு மூன்று மாதத்திற்கு நிதி ஒதுக்கீடுகளை செய்வதற்கான அனுமதி அரசியலமைப்பில் இருப்பதாக அரச தரப்பினர் தெரிவித்தாலும், புதிய பாராளுமன்றம் என்று கூடவுள்ளது என்பது தொடர்பில் ஜனாதிபதி உரிய திகதியை குறிப்பிட்டு வர்த்தமானியை வெளியிட்டால், இந்த பாராளுமன்றம் கூடும் தினம் வரையான நிதி ஒதுக்கீட்டை ஜனாதிபதியால் முன்னெடுக்க முடியும்.

அவ்வாறு திகதியும் அறிவிக்காத நிலையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் எதிர்வரும் தலைமுறையினருக்கு தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அதனால் ஜனாதிபதி என்பவர் அனைவருக்கும் முன்மாதிரியாக நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்பை மதித்து நடப்பவராகவும், பாராளுமன்றத்தை பலப்படுத்துபவராகவும் விளங்க வேண்டுமே தவிர அவற்றை மீறி செயற்படுபவராக இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment