ராஜபக்ஷாக்களின் ஆறு மாத கால ஆட்சியின் விளைவே மாளிகாவத்தையில் இடம்பெற்ற அனர்த்தம் - முஜிபுர் றஹூமான் - News View

Breaking

Post Top Ad

Friday, May 22, 2020

ராஜபக்ஷாக்களின் ஆறு மாத கால ஆட்சியின் விளைவே மாளிகாவத்தையில் இடம்பெற்ற அனர்த்தம் - முஜிபுர் றஹூமான்

(செ.தேன்மொழி) 

ராஜபக்ஷாக்களின் ஆட்சிக் காலங்களில் மக்களுக்காக எந்தவித சலுகைப்பொதிகளும் பெற்றுக் கொடுப்பதற்கான சாத்தியமில்லை என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹூமான், ராஜபக்ஷாக்களின் ஆறு மாத கால ஆட்சியின் விளைவே மாளிகாவத்தையில் இடம்பெற்ற அனர்த்ததுக்கு பிரதான காரணம் எனவும் குற்றம் சாட்டினார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலம் கடந்துள்ள நிலையில் அவர்கள் வழங்குவதாக குறிப்பிட்ட எந்த சலுகைப் பொதிகளையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை. 

தற்போது மக்களது பணத்தை அரசாங்கத்திற்கு அர்பணிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தொலைபேசி அழைப்பு ஒளிகளிலும் அரசாங்கத்திற்கு நிதிவுதவியை வழங்குமாறு குறிப்பிட்டு குறல் பதிவொன்று வெளியிடப்பட்டு வருகின்றது. 

இந்த தொலைபேசி அலைவரிசை நிறுவனங்களிடம் எங்களது தனிப்பட்ட அனுமதியின்றி நீங்கள் எவ்வாறு இந்த குறல் பதிவை எமது அழைப்பு ஒளியாக பகிரலாம் என்று வினவுகின்றேன். 

நீங்கள் அரசாங்கத்திற்கு துணைபோவதென்றால் உங்கள் நிறுவனத்தினூடாக நிதி வழங்குங்கள். இந்த செயற்பாடும் பேராசிரியர் பி.பீ.ஜயந்சுதரவின் வேண்டுகோளுக்கு நிகரானதாகவே விளங்குகின்றது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினர் பெரும் சேவையாற்றி வருகின்றனர். அவர்களது பாதுகாப்பிற்காக அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் வைத்தியசாலை குழுவினர், மூன்று அல்லது நான்கு பேர் ஒரே அரையில் தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சுகாதார பிரிவினருக்காக முன்னெடுக்கப்படும் ஓரிரு நலன்தரும் செயற்பாடுகளும் நாட்டிலுள்ள தனவந்தர்கள் மற்றும் வர்த்தகர்களின் உதவியுடனே மேற்கொள்ளப்படுகின்றது. அரசாங்கத்தின் செலவில் எவ்வகை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 

வைரஸ் பரவலின் காரணமாக 60 வீதமான பேரின் வருமானம் பாதிப்படைந்துள்ளது. நாடு முடக்கப்பட்டு இரு மாதம் கடந்துள்ள நிலையில், எந்தவித வருமானமும் இன்றி இருக்கும் சாதாரணை மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபாய் நிவாரணமும் முதற்கட்டமாக மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. இந்த 5000 ரூபாய் மூலம் இரு மாதங்களுக்கு அவர்களால் பசியைப் போக்கிக் கொள்ள முடியுமா? 

இதேவேளை நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களையும் செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக காலவகாசம் வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்தாலும், எவ்வித வருமானமும் இன்றி இருக்கும் மக்கள் இந்த கட்டணங்களை செலுத்துவது எவ்வாறு. இதனால் மின்சாரம் ஒரு அளகுக்கு 40 வீதம் என்ற சலுகையையாவது பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உலக ச்சந்தையில் எரிபொருள் விலை பெருமளவு வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும் அதனால் கிடைக்கப்பெறும் இலாபத்தைக் கொண்டு மக்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை. தொடர்ந்தும் அரசாங்கம் தம்மிடம் நிதி இல்லை என்றே தெரிவித்து வருகின்றது. வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கத்திற்கு பல நிதியுதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளபோதிலும், அதனை புறக்கணித்து வருகின்றது. 

ராஜபக்ஷாக்களின் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது சாத்தியமற்றதே. இதற்கு முன்னரும் சரி தற்போதும் சரி ராஜபக்ஷாக்கள் நாட்டு மக்களுக்காக சலுகை பொதிகள் வழங்க தயாராக இல்லை என்பதை காண்பித்துள்ளனர். இவர்கள் ஆட்சியின் பலாபலனாகவே மாளிகாவத்தை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதுவரை காலமும் இலங்கை மக்கள் யாரும் இவ்வாறு பணத்தை பெற்றுக்கொள்ள திரளாக திரண்டு ஒருவரை ஒருவர் முட்டிமோதி உயிரிழந்துள்ளமைக்கான சாத்தியமில்லை, ஆனால் ஜனாதிபதி கோத்தாபயவின் அரசாங்கம் ஆட்சியமைத்து ஆறு மாதமே கடந்துள்ள நிலையில், மக்கள் பசியைப் போக்கிக் கொள்வதற்காக இவ்வாறு ஒன்றுக் கூடியுள்ளனர். 

நிதி வழங்கல் செயற்பாடு சட்ட ரீதியாக குற்றச் செயலாக கருதப்பட்டாலும், அது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து சட்டநடவடிக்கை எடுக்கலாம். ஆனால் மக்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியமை தொடர்பில் நாட்டின் ஆட்சியாளர்களே பதில்கூற வேண்டும். நாட்டு மக்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என்பது தொடர்பில் அவர்களே தங்களுக்குள் வினவிக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad