நாட்டை வழமைக்கு கொண்டுவர முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

நாட்டை வழமைக்கு கொண்டுவர முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு வாழ்க்கையையும் நிறுவன செயற்பாடுகளையும் மே 11 திங்கள் முதல் வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரிவாக ஆராய்ந்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் முன்வைத்துள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப அரச, தனியார் துறையின் அனைத்து சேவைகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இது பற்றி தெரிவித்தார்.

நிறுவன செயற்பாடுகள் குறித்து விரிவான திட்டங்களை சுகாதாரத் துறைகளுக்கு முன்வைக்குமாறு அறிவிக்கப்பட்டது.

பொது போக்குவரத்து நடவடிக்கைகளை உரிய சுகாதார முறைமைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன், பணிக்குழாமினருக்கு போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் குறித்த நிறுவனங்களின் நலன்புரி சங்கங்களுடன் இணைந்து திட்டமிடக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் சுட்டிக்காட்டினார்.

நிறுவனங்களை நடத்திச் செல்லும் போது ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பது சேவைகள் பாதிக்கப்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும். நிறுவன கட்டமைப்புக்கு ஏற்ப பணி முறைமாற்றங்களை தீர்மானிக்க முடியும். சேவைக்கு சமூகமளிக்கும் நேரத்தை கட்டளையாகவன்றி நிறுவன தேவையின் படி தீர்மானிக்க வேண்டும்.

வீடுகளில் இருந்து வேலை செய்யும் போது சில நிறுவனங்கள் விரிவான ஒழுங்கில் சேவைகளை வழங்கியுள்ளன. அவற்றை முன்னெடுத்து மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியை பயன்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் அவற்றுக்கு பதில்களை வழங்குவதற்கும் அதற்கு சட்ட ஏற்பை வழங்குமாறும் ஜனாதிபதி அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.
அடையாள அட்டை, கடவுச் சீட்டு மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வலய கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைகளின் பேரில் கிராமிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை திறக்கக்கூடிய வாய்ப்புகளை கண்டறியவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் போது நீர், துப்பரவேற்பாடு வசதிகள் மற்றும் சுகாதாரத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மின்சாரம், நீர், நீர்ப்பாசனம், விவசாயம், கட்டிட நிர்மாணம் போன்ற அபிவிருத்தி பணிகள் ஏனைய மாவட்டங்களில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மே 11ஆம் திகதி முதல் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வரும் மாவட்டங்களிலும் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட முடியும். வேலைத்தளங்கள் மற்றும் நிறுவனங்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் நேரடி கண்காணிப்புக்கு உட்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

எலிக்காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற நோய்கள் தொடர்பில் எதிர்காலத்தில் எழக்கூடிய பிரச்சினைகள் குறித்தும் அதிகம் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad