கொரோனாவை கட்டுபடுத்தி வைத்துள்ளோமே தவிர நாட்டிலிருந்து முற்றாக அழித்து விடவில்லை ! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

கொரோனாவை கட்டுபடுத்தி வைத்துள்ளோமே தவிர நாட்டிலிருந்து முற்றாக அழித்து விடவில்லை ! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

(ஆர்.யசி) 

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் இதுவரையில் முப்பதாயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அவற்றில் மூன்று வீதமான கொவிட்-19 தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஆகவே வைரஸ் தொற்று நோய் சமூக பரவலாக மாறாத வகையில் தடுத்துள்ளதாக கூறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இதுவரை முன்னெடுத்த வைத்திய பரிசோதனைகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளாது தொடர்ந்தும் முன்னெடுப்போம் எனவும் அவர் கூறினார். 

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தல் சம்பந்தமாக அரசாங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் இடையில் கலந்துரையாடப்பட்டு வருகின்ற நிலையில் அது குறித்தும், தற்போதைய நிலவரம் குறித்தும் கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் ஆரோக்கியமான மட்டத்தை அடைந்துள்ளது. நாடு இன்று ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்பது உறுதிப்படுத்தக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. 

இவ்வாறான நிலையை அடைய நாம் கடுமையாக கடந்த காலங்களில் போராட வேண்டியிருந்தது. ஏனைய நாடுகள் இன்றுவரையும் கொவிட்-19 தொற்று நோய் தாக்கத்திற்கு உள்ளாகி அதிலிருந்து மீள்வதில் கடும் சிரமங்களை அனுபவித்து வருகின்ற நிலையிலும் நாம் வெகு விரைவில் இந்த நெருக்கடியை சமாளித்து மக்களை பாதுகாத்துள்ளோம். 

குறிப்பாக மக்களிடம் வைரஸ் நெருங்காத வகையில் தடுப்பு சுவர் ஒன்றினை உருவாக்கியுள்ளோம். வைரஸ் சமூக பரவலாக மாற முன்னர் அதனை எம்மால் தடுக்க முடிந்துள்ளது. வேறு எந்த நாடுகளும் செய்யாத விடயத்தை நாம் செய்துள்ளோம் என்றால் அதற்கு எமது சுகாதார சேவையின் தரமும், அதிகாரிகள் மற்றும் மக்களின் ஈடுபாடுமே காரணமாகும். 

வைரஸ் தொற்று நோய் பரவ ஆரம்பித்த காலம் தொடக்கம் அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் மக்கள் முறையாக பின்பற்றி சுகாதார அறிவுரைகளை கையாண்ட காரணத்தினால் மக்களே தம்மை பாதுகாத்துக் கொண்டுள்ளனர் என்றே நாம் கூறுவோம். எமது நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும் மக்களின் அர்ப்பணிப்பும் பொறுமையும், புத்திசாலித்தனமுமே பிரதானமாகும். 

இப்போது வரையில் நாம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளாது தொடர்ந்தும் சுகாதார வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். வைரஸ் தொற்றுக்கள் மக்களை நெருங்காத வகையில் விசேட வேலைத்திட்டங்களை கையாள வேண்டும். அதற்கான புதிய வேலைத்திட்டங்களை நாம் உருவாக்கியுள்ளோம். 

இதுவரை காலமாக 30 ஆயிரம் பி.சிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நாம் முன்னெடுத்த பரிசோதனைகளில் 3 வீதமான தொற்று நோயாளர்களே கண்டறியப்பட்டுள்ளனர். ஆகவே இது ஆரோக்கியமான விடயமாகும். 

இந்நிலையில் எதிர்வரும் 11 ஆம் திகதி ஊரடங்கை தளர்த்துவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் ஊரடங்கு தளர்த்தப்படும். இந்நிலையில் மக்கள் மிகவும் அவதானமாக சுகாதார அறிவுரைகளை பின்பற்றி செயற்பட வேண்டும். நாம் வைரஸ் தொற்றை கட்டுபடுத்தி வைத்துள்ளோமே தவிர நாட்டிலிருந்து முற்றாக வைரஸ் தொற்று நோய் நீக்கப்படவில்லை என்பதை சகலரும் நினைவில் வைத்திருக்க வேண்டும். 

இன்னமும் இது குறித்த விசேட கண்காணிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும், பி.சி,ஆர் பரிசோதனைகள் இடம்பெறும். ஆகவே நோய்த் தாக்கங்கள் எதுவாக இருப்பினும் மக்கள் தமக்கான பரிசோதனைகளை செய்தாக வேண்டும். அதுவே சமூகத்தை பாத்துக்க சிறந்த வழிமுறையாக அமையும். 

அதேபோல் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளுடன் இந்த ஊரடங்கை தளர்க்கின்றது. அவ்வாறு இருக்கையில் மக்கள் அவை அனைத்தையும் கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad