தீர்ப்பின் பின்னரே தேர்தல் திகதி குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்படும் - புதன்கிழமை கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Monday, May 18, 2020

தீர்ப்பின் பின்னரே தேர்தல் திகதி குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்படும் - புதன்கிழமை கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு

(ஆர்.யசி) 

பொதுத் தேர்தல் நடத்துவது குறித்த திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும், தேர்தல் விடயம் குறித்து நீதிமன்றத்தில் இப்போது மனுத்தக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தினால் தீர்ப்பின் பின்னரே தேர்தல் திகதி குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் எதிர்வரும் புதன்கிழமை காலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது. 

தேர்தல் திகதி குறித்த தீர்மானம் எடுப்பதில் பல முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தைத்தையும் வலுவிழக்கச் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று திங்கட்கிழமையும் நாளை செவ்வாய்க்கிழமையும் பரிசீலிக்கப்படவுள்ளது. 

இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மட்டத்தில் நான்கு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படாது கூட்டம் கலைந்துள்ளது. 

அதேபோல் சுகாதார, பாதுகாப்பு அதிகாரிகள் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போதும் தேர்தல் நடத்துவது குறித்த எந்தவித சான்றிதழையும் தர மறுக்கின்றனர். எனினும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது குறித்த எந்தவித தீர்மானமும் இன்னமும் எடுக்கவில்லை எனவும் சுகாதார அதிகாரிகள் இன்னமும் நாட்டின் சுகாதார தன்மைகள் மக்களின் பாதுகாப்பு குறித்த எந்தவித வாக்குறுதிகளையும் வழங்கவில்லை என தேர்தல்கள் திணைக்களத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

உரிய திகதியில் தேர்தல் நடத்தப்படாது போனமைக்காகவே மாற்றுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர ஜூன் மாதம் 20 என்ற அறிவிப்பு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாய திகதி அல்ல. எனினும் திகதியை சாட்டாக வைத்தே பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ஆணைக்குழு மீது அவநம்பிக்கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. எமக்குள்ள அதிகார எல்லைக்குள் என்ன செய்ய முடியுமோ அதனையே முன்னெடுத்து வருகின்றோம். தேர்தல் நடக்கும் திகதி குறித்து ஊடகங்கள் பல்வேறு காரணிகளை கூறினாலும் இன்னமும் தேர்தல் திகதி அறிவிக்கப்படவில்லை. விருப்பு இலக்கமும் வழங்கப்படவில்லை.

நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒன்றினை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே இவ்வாறான நிலையில் ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை. எனவே செவ்வாய்க்கிழமை நீதிமன்ற தீர்ப்பை பார்த்தே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் கூறுகையில், தேர்தல் திகதி குறித்த தீர்மானம் எடுக்க முடியாதுள்ளது. நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தினால் தீர்ப்பு ஒன்று வரும் வரையில் நாம் காத்திருக்க வேண்டும். எனவே தீர்ப்பை பொறுத்தே நாம் அடுத்த கட்டமாக தீர்மானம் எடுப்போம். 

எவ்வாறு இருப்பினும் எதிர்வரும் புதன்கிழமை காலையில் தேர்த்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது. செவ்வாய்க்கிழமை வழங்கப்படும் நீதிமன்ற தீர்மானம் என்னவோ அது குறித்து புதன்கிழமை எமது கூட்டத்தில் கலந்துரையாடப்படும். அதேபோல் தேர்தல் நடத்துவது குறித்தும் சுகாதார நிலைப்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்படும் என்றார்.

No comments:

Post a Comment