நோன்புப் பெருநாள் தொழுகை சம்பந்தமான சில வழிகாட்டல்ளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கியுள்ளது - News View

About Us

About Us

Breaking

Saturday, May 23, 2020

நோன்புப் பெருநாள் தொழுகை சம்பந்தமான சில வழிகாட்டல்ளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கியுள்ளது

இவ்வருட நோன்புப் பெருநாள் தொழுகை சம்பந்தமான சில வழிகாட்டல்ளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கியுள்ளது. 

அதுதொடர்பான விபரம் வருமாறு ஏலவே அறிவுறுத்தப்பட்டதற்கு ஏற்ப நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரன சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு பெருநாள் தொழுகையை வீட்டில் ஜமாஅத்தாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது சுன்னத் முஅக்கதாவாகும். இதனை தனியாக தொழுவதற்கு அனுமதியிருந்தாலும், ஜமாஅத்தாக நிறைவேற்றுவதே சிறந்ததாகும்.

சூரியன் உதயமானதிலிருந்து உச்சத்தை அடையும் வரை பெருநாள் தொழுகையை நிறைவேற்ற முடியும். என்றாலும், சூரியன் ஓர் ஈட்டிப் பிரமானம் உயர்ந்ததிலிருந்து (15நிமிடங்கள் கழிந்ததிலிருந்து) தொழுது கொள்வது சிறந்ததாகும்.

பெருநாள் தொழுகைக்கென அதான், இகாமத் கிடையாது.

பெருநாளுடைய தொழுகை இரண்டு ரக்அத்கள் கொண்ட தொழுகையாகும். சுன்னத்தான நோன்புப் பெருநாள் தொழுகையைத் தொழுவதாக நிய்யத் வைத்து, தக்பீர் கூறி கைகளைக் கட்டியதன் பின் வஜ்ஜஹ்த்து துஆவை ஓதுவது சுன்னத்தாகும்;. இது போன்ற ஹதீஸில் வந்துள்ள வேறு துஆக்களையும் ஓதலாம்.

பின்னர் ஏழு தக்பீர்கள் கூறி ஒவ்வொரு தக்பீருக்கும் ஆரம்ப தக்பீர் போன்று கைகளை உயர்த்திக் கட்டுதல் வேண்டும். அவ்வாறே, இரண்டாவது ரக்அத்திலும் முதல் தக்பீர் (ஸூஜுதிலிருந்து நிலைக்கு வரும்) தவிர்த்து ஜந்து தக்பீர்கள் கூறி, கைகளைக் கட்டிக்கொள்ளுதல் வேண்டும். இரண்டு ரக்அத்துக்களிலும் ஒவ்வொரு தக்பீர்களுக்குமிடையில், سُبْحَانَ اللهِ، وَالْحْمدُ لِلّهِ، وَلَا إِلهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُபோன்ற திக்ர்களை ஓதிக்கொள்ளலாம்.

இரண்டு ரக்அத்திலும் தக்பீர்கள் முடிந்ததன் பின் ஸூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுவது கட்டாயமாகும். பிறகு, ஏதாவது ஒரு ஸூராவை ஓதுவது சுன்னத்தாகும். ஒரு ஸூராவும் மனனமில்லை என்றால் ஸூரத்துல் ஃபாத்திஹா மாத்திரம் போதுமானது.

என்றாலும், முதலாவது ரக்அத்தில் ஸூரத்துல் (الأعلى) அஃலாவையும், இரண்டாவது ரக்அத்தில் ஸூரத்துல் (الغاشية) ஙாஷியாவையும் மனனமுள்ளவர்கள் ஓதுவது சுன்னத்தாகும்.

ஒருவர் தனியாக தொழுகையை நிறைவேற்றினால் அவர் பெருநாள் தொழுகையான இரண்டு ரக்அத்துக்களை மாத்திரம் தொழுது கொள்வார்.

இரண்டு நபர்கள்; அல்லது அதைவிடக் கூடுதலானவர்கள் இருந்தால் குத்பாவை நிகழ்த்தலாம். ஜுமுஆவுக்குத் தேவையான எண்ணிக்கை அவசியமில்லை.

பெருநாள் தொழுகையின் பின், பெருநாளுடைய குத்பாவை நிகழ்த்துவது சுன்னத்தாகும். அது ஜுமுஆவுடைய குத்பாவைப் போன்று நிகழ்த்தப்படல் வேண்டும். என்றாலும், பெருநாளுடைய முதலாவது குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டும், இரண்டாவது குத்பாவை ஏழு தக்பீர்களைக் கொண்டும் ஆரம்பித்தல் வேண்டும்.

ஜுமுஆவுடைய இரு குத்பாக்கள் போன்று பெருநாளுடைய குத்பாவையும் செய்தல் வேண்டும். இரு குத்பாக்களிலும் பின்வருவனவற்றை அறபியில் கூறுவது போதுமானது.

الْحْمدُ لِلّهِ

والصّلاَةُ والسّلاَمُ عَلَى مُحَمَّدٍ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

واتَّقُوا الله

மேலும், இரு குத்பாக்களில் ஏதாவது ஒன்றில் அல்-குர்ஆன் வசனம் ஒன்றை ஓதுதல். இரண்டாவது குத்பாவில் اللهُمَّ اغْفِرْ لِلمُؤمِنِيْنَ والمُؤْمِنَاتِஎன்று கூறி முஃமின்களுக்காக துஆச் செய்து குத்பாவை நிறைவு செய்தல் வேண்டும். மாதிரி குத்பா இணைக்கப்பட்டுள்ளது.

குத்பாவை நிறைவு செய்ததன் பின் விரும்பினால் உபதேசம் ஒன்றை நிகழ்த்தலாம்.

மேற்குறித்த விடயங்களை ஓதி குத்பாவை நிகழ்த்தக் கூடியவர் யாரும் இல்லையெனில் தொழுகையுடன் போதுமாக்கிக்கொள்ள முடியும். ஏனெனில், பெருநாள் தொழுகை நிறைவேறுவதற்கு குத்பா அவசியமில்லை.

ஜமாஅத்தாக தொழும்போது ஆண்களே இமாமத் செய்தல் வேண்டும்;. பெண்கள் மாத்திரம் ஜமாஅத்தாக தொழும் நிலை ஏற்பட்டால், பெண்களில் ஒருவர் இமாமத் செய்ய முடியும். இச்சந்தர்ப்பத்தில் பெண்களுக்கு குத்பா இல்லை. பெண்களில் ஒருவர் சிறிய உபதேசம் ஒன்று செய்து கொள்ளலாம்.

தற்கால அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பெருநாள் தொழுகை மற்றும் குத்பாவை வீட்டில் உள்ளவர்கள் மாத்திரம் ஒன்று சேர்ந்து நிறைவேற்றல் வேண்டும்.

ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள், பெருநாள் தொழுகைக்கு முன்பு அதனை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

பெருநாளுடைய நாளில் மேற்கொள்ளப்படும் சுன்னத்தான காரியங்களை நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நிறைவேற்றிக் கொள்ளல் வேண்டும்.

No comments:

Post a Comment