சதிகாரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை, என்னையும் மதுபான கடத்தல்காரராக சித்தரித்து வருகின்றனர் - நளின் பண்டார - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 6, 2020

சதிகாரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை, என்னையும் மதுபான கடத்தல்காரராக சித்தரித்து வருகின்றனர் - நளின் பண்டார

(செ.தேன்மொழி) 

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மீது திட்டமிட்ட சேறுபூசல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்த சதிகார்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாகவும் கூறினார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் மீது திட்டமிட்ட சேறுபூசல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. திட்டமிட்ட குழு வொன்றே இந்த சதி திட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றது. 

இந்த சேறு பூசல்கள் தற்போது எனக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனக்கு சொந்தமான வீடொன்றை பராமாரிக்கும் பொறுப்பை அந்த வீட்டில் அயலில் வசிக்கும் நபரொருவரிடம் ஒப்படைந்திருந்தேன். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுபான விவகாரம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் சென்றுள்ளார். இதனுடன் தொடர்புபடுத்தி என்னையும் மதுபான கடத்தல்காரராக சித்தரித்து வருகின்றனர். 

அரசியல் இலாபம் கருதி முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த செயற்பாட்டில் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால், பிரபல மதுபான கடத்தல்காரர்களும் வர்த்தகர்களுமே பங்கு கொண்டுள்ளனர். இந்த குழுவினர் இணைந்து முகப்புத்தகம் மற்றும் இணையத்தளத்தினூடாக என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். 

குருணாகலை பகுதியில் உள்ள எனது வீடொன்றை வைத்தியர்கள் தங்குவதற்காக வழங்கியுள்ளேன். இதற்கு குறித்த பகுதியின் நகர சபை தவிசாளரினால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது என்மீது கொண்ட வெறுப்பினால் வெளிவந்த முதல் சதி திட்டமாகவும் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. 

நாங்கள் அரச நியமணங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து நீங்கியே அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். சட்டவிரோத செயற்பாடுகளின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. அதனால் எம்மீது இவ்வாறு திட்டமிட்ட சேறு பூசல்களை மேற்கொண்டுவரும் நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வோம். 

இதேவேளை இந்த கடத்தல்காரர்கள் யார் என்பது தொடர்பில் மக்கள் நன்கறிந்துள்ளனர். அதனால் அவர்கள் புத்திசுயாதீனத்துடன் செயற்படுவார்கள் என்று நான் கருதுகின்றேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad