அரச நிதியை ஜனாதிபதி செலவழித்துவருவது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டும் - முன்னாள் எம்.பி. ஹரிஸன் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

அரச நிதியை ஜனாதிபதி செலவழித்துவருவது தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டும் - முன்னாள் எம்.பி. ஹரிஸன்

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

நிதி தொடர்பான பூரண அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீ. ஹரிஸன், அரசாங்கத்தின் நிதியை ஜனாதிபதி நினைத்த பிரகாரம் செலவழித்துவருவது தொடர்பாக பிரச்சினை ஏற்படும். அதேபோன்று அரச அதிகாரிகளும் பொறுப்புக் கூற வேண்டிவரும் என்றும் கூறினார். 

தம்புள்ள பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

பாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பாகவும் அரசாங்கத்தினர் எமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு அரசாங்கம் ஏன் இந்தளவு பயப்பட வேண்டும் என கேட்கின்றேன். 

ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை கலைக்கவில்லை என்றால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை பாராளுமன்றம் தொடர்ந்து செயற்பட்டிருக்கும். அவ்வாறு இருக்கையில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு இவர்கள் அச்சப்படுவது தொடர்பில் எமக்கும் சந்தேகம் எழுகின்றது. 

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டுக்கு நிவாரணமாக ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி கிடைக்கப் பெற்றிருக்கின்றது. நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற நிதி தொடர்பாகவும் அதனை செலவிடும் நிதி தொடர்பாகவும் முறையாக பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். 

அதேபோன்று ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன மக்களின் நிதியாகும். அதனை பெற்றுக் கொள்வதாக இருந்தால் பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் நிதி தொடர்பான பூரண அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கின்றது. ஆனால் இவர்கள் சட்டத்துக்கு முரணாக நிதியை செலவழித்து வருவதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment