தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் - உயர் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாதம் ! - News View

Breaking

Post Top Ad

Friday, May 22, 2020

தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் - உயர் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாதம் !

(எம்.எப்.எம்.பஸீர்) 

சுகாதார அதிகாரிகள் நாடு முழுதும் முன்னெடுத்துள்ள பரிசோதனைகளின் முடிவுகளுக்கு அமைய, பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பது தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நேற்று உயர் நீதிமன்றத்தில்ல் தெரிவித்தார். 

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேற்று தொடர்ச்சியாக 5 ஆவது நாளாக பரிசீலனைக்கு வந்த போதே, மனுக்களில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர சார்பில் 2 ஆவது நாளாகவும் வாதங்களை முன்வைத்து அவர் இதனை தெளிவுபடுத்தினார். 

தனது சேவை பெறுநரான ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர்வுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் எழுத்து மூலம் அறிவித்த அறிவித்தலையும் இதன்போது நீதிமன்றில் சமர்ப்பித்த அவர், அதனை மையப்படுத்தி தேர்தலை நடாத்த எந்த தடைகலும் இல்லை என வாதிட்டார். 

பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையானது, நேற்றைய தினம் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்றின் 501 ஆம் இலக்க அறையான உயர் நீதிமன்ற சம்பிரதாய அமர்வு நிகழ்வுகள் மண்டப அறையில் பரிசீலனைக்கு வந்தன. 

இதன்போது நேற்றுமுன்தினம் தொடர்ச்சியாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முதலில் வாதங்களை தொடர்ந்தார். அவரது வாதங்கள் நேற்றைய தினமும் சுமார் ஒரு மணி நேரத்தையும் தாண்டியது. 

இந்நிலையில் தனது வாதங்களின் இடையே முக்கியமாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதி செயலாளருக்கு அறிவித்ததாக கூறப்படும் எழுத்து மூல ஆவணம் ஒன்றினை மன்றில் சமர்ப்பித்த ஜனாதிபதி சட்டத்தரணி அது சார்ந்து வாதங்களை முன்வைத்தார். 

'நாடு முழுதும் சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பரிசோதனைகளை மையப்படுத்தி இந்த ஆவணம் எனது சேவை பெறுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் மிகத் தெளிவாக பொதுத் தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார். 

சுகாதார பாதுகாப்புடன் கூடிய தேர்தல் ஒன்றினை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவசியமாயின் தம்மிடம் கோரப்பட்டால் வழிகாட்டல்களை வழங்ககவும் தயார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் கூறியுள்ளார். 

தேர்தலை நடாத்துவதற்கு எந்த தடையும் இல்லை. இந்த மனுக்கள் தொடரப்பட்டிருந்தாலும், தேர்தல் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க எந்த இடைக்கால தடைகளையும் இந்த நீதிமன்றம் இதுவரை விதிக்காத நிலையிலும் கூட, தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடாத்துவதற்கான எந்த நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவே தேர்தலை நடாத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கூறியுள்ளார். அப்படியானால் தேர்தல்கள் ஆணைக்குழு, யாரின் பேச்சை சமிக்ஞைக்காக இன்னும் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள். 

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவித்தல் பிரகாரம், இந்நிலைமை தொடர்ந்தும் சிறிது காலம் அவ்வாறே முன்னெடுத்து செல்லப்படல் வேண்டும். அதற்குள் நாட்டை வழமைக்கு கொண்டுவரும் செயற்பாடுகளும் நடை பெற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அத்துடன் தனிமைப்படுத்தல், தொற்று நோய் தடுப்பு கட்டளை சட்டம் திருத்தப்பட்டு கொரோனா ஒழிப்பு விதிமுறைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியிருக்கின்றர்.' என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா வாதிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad