பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? விக்னேஸ்வரன் கேள்வி - News View

About Us

About Us

Breaking

Monday, May 18, 2020

பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? விக்னேஸ்வரன் கேள்வி

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தம்பி பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? எனக்கேள்வி எழுப்பியுள்ள தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரபாகரனின் போராட்டத்தை மகாபாரதப்போருடனும் ஒப்பிட்டுள்ளார்

தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனிடம் பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் சரியானது என்று நீங்கள் கருதுகின்றீர்களா? எனக்கேள்வி எழுப்பியபோதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி அன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கடைசிப் பந்தியைப் பார்த்தீர்களானால் அதில் கிட்டத்தட்ட பின் கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

“இந்த மகாநாடானது தமிழ் தேசத்திடம் ஒரு பொதுவான வேண்டுதலை விடுக்கின்றது. முக்கியமாகத் தமிழ் இளைஞர்களிடம் எமது சுதந்தரத்திற்கான புனிதப் போரில் தம்மை முற்றாக ஈடுபடுத்துமாறு வேண்டுவதுடன் இறைமையுடைய தமிழ் ஈழம் என்ற இலக்கை அடையும் வரையில் பின் வாங்காது போரிட வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது”.

அன்றைய கால தமிழ்த் தலைவர்களின் வேண்டுகோளில் “புனிதப் போர்” என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறித்த போர் அஹிம்சை வழியிலோ, சத்தியாக் கிரகம் மூலமோ, அரச தந்திரம் மூலமோ நடைபெற வேண்டும் என்று அடையாளப்படுத்தப்படவில்லை. ஆகவே தம்பி பிரபாகரன் குறித்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை?

நாம் அஹிம்சையில் நாட்டம் கொண்டவர்கள் என்ற முறையில் ஆயுதப் போராட்டத்தைக் குறை கூறவோ, கொச்சைப்படுத்தவோ எமக்கு எந்த உரித்தும் இல்லை. தம்பி பிரபாகரன் அப்போதைய தமிழ்த் தலைவர்கள் கோரியதைத் தான் முழுமூச்சுடனும் நம்பிக்கையுடனும் நடைமுறைப்படுத்தினார். அதைப் பிழையென்று இன்று நாம் கூற எமக்கு எந்த உரித்தும் இல்லை.

மகாபாரதம் நிலத்திற்கான போர் பற்றிக் கூறுவது. பகவான் கிருஷ்ணரே ஆயுதப் போராட்டத்தை முன்னின்று நடத்தனார். அன்பு வழியை நாடும் நாங்கள் பகவான் கிருஷ்ணன் சென்ற தூதையும் கவனிக்க வேண்டும். ஊசி குத்தும் இடங் கூடத் தர முடியாது என்றதன் பிற்பாடு தான் போர் தொடங்கியது. ஆகவே தம்பி பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் அன்றைய தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடத்தப்பட்ட போர் என்பதே எனது கருத்து என்றார்.

தினக்குரல்

No comments:

Post a Comment