பாகிஸ்தான் விமான விபத்து : 99 பேர் பலி - News View

Breaking

Post Top Ad

Friday, May 22, 2020

பாகிஸ்தான் விமான விபத்து : 99 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டில் இன்று நடந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 99 பேர் உயிரிழந்துவிட்டதாக கராச்சி மேயர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி இன்று பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 91 பயணிகள் 8 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 99 பேர் பயணித்தனர்.

விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முயற்சித்தபோது முதல் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து விமானத்தை வானில் ஒருமுறை வட்டமடித்துவிட்டு ஓடுதளத்தில் விமானத்தை மீண்டும் தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார். 
உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரி இரண்டு ஓடுதளங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அதில் எங்கு வேண்டுமானாலும் தரையிறங்களாம் என தெரிவித்துள்ளார். 

அப்போது அங்குள்ள விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரியிடம் அந்த விமானத்தை இயக்கிய கேப்டன் 'லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்ததாக ஒரு அதிகாரி கூறியுள்ளார். 

விமான கட்டுப்பாட்டு அறையில் பதிவுசெய்யப்பட்ட விமானி மற்றும் தகவல் அதிகாரியுடனான உரையாடலில் தரையிறங்க சிறிது நேரம் இருக்கும்போது விமானி 'விமானத்தின் எஞ்சின் செயல் இழந்து விட்டது’ என பேசியுள்ளார். 
விமானம் இரண்டாவது முறை தரையிறங்க முயற்சி செய்தபோது எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதால்தான் ஓடுதளத்திற்கு அருகே இருந்த மக்கள் அதிகம் வசித்துவரும் மலிர் நகரின் மாடல் காலனி என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 99 பேரும் உயிரிழந்துவிட்டதாக கராச்சி மேயர் வாசிம் அக்தர் தெரிவித்துள்ளார். 

ஆனால் மற்றொரு புறம் விமானத்தின் முன் இருக்கைகளில் பயணித்த 3 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி தொலைக்காட்சியில் தகவல் வெளியாகியுள்ளது. 
மேலும், அந்த உள்ளூர் செய்தி தொலைக்காட்சியில் விமான விபத்தில் இதுவரை 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படுகாயமடைந்தவர்கள் விமானத்தில் பயணித்தவர்களா? அல்லது விபத்து நடந்த பகுதியில் இருந்த மக்களா? என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

அதேபோல் சிந்து மாகாண அரசு செய்தித் தொடர்பாளர் முர்தசா கூறுகையில், 'தற்போது வரை விமானத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் இந்த விபத்தில் இருந்து தப்பிப்பிழைத்துள்ளனர். அவர்களது பெயர்கள் மசூத் மற்றும் சுபய்ர் ஆகும். இருவரும் தற்போது நலமுடன் உள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad