மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகரில் மதுபோதையில் வானம் செலுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வாகனத்தைச் செலுத்திச் சென்றபோது, வாகன வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பனவும் இருக்கவில்லை.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்தியமை, காப்புறுதிப் பத்திரம் இல்லாமல் வீதியில் வாகனம் செலுத்திச் சென்றமை, வாகன வரிப் பத்திரம் இல்லாமல் வாகனத்தை எடுத்துச் சென்றமை ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் அந்த நபர் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸாரால், நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. அவர் தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்று குற்றவாளி என மன்றுரைத்தார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமைக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்தியமைக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும், காப்புறுதிப் பத்திரம் இல்லாமல் வீதியில் வாகனம் செலுத்திச் சென்றமைக்கு 25 ஆயிரம் ரூபாயும், வாகன வரிப் பத்திரம் இல்லாமல் வாகனத்தை எடுத்துச் சென்றமைக்கு 7 ஆயிரத்து 500 ரூபாயும் தண்டப்பணமாகச் செலுத்தவேண்டும் என்று மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.

நான்கு குற்றங்களுக்குமாக 92 ஆயிரத்து 500 ரூபாயை தண்டப்பணமாகச் செலுத்திய பின்னர் குறித்த நபர் விடுவிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad