இலங்கையில் 9ஆவது மரணம், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிடட 15 பேரின் மாதிரி சேகரிப்பு - தனியாக வசித்து வந்த மூத்த புதல்வர் இறுதிக்கிரியைக்கு அனுப்பி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 5, 2020

இலங்கையில் 9ஆவது மரணம், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிடட 15 பேரின் மாதிரி சேகரிப்பு - தனியாக வசித்து வந்த மூத்த புதல்வர் இறுதிக்கிரியைக்கு அனுப்பி வைப்பு

இலங்கையில் 9ஆவது கொரோனா தொற்று நோய் காரணமான மரணமான, கொழும்பு 15, மோதறை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் 06 பேர் உள்ளிட்ட 15 பேரின் மாதிரிகள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இன்றையதினம் (05) மரணமடைந்த குறித்த பெண், கொழும்பு 15, மோதறை 'மெத்சந்த செவண' அடுக்குமாடி குடியிருப்பின் 13 ஆவது மாடியில் வசித்து வந்துள்ளதாக, கொழும்பு மாநகர சபையின், மாவட்ட இல 01, சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் சசங்க ரணசிங்க தெரிவித்தார்.

மரணமடைந்த குறித்த பெண், கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி சுகவீனமுற்ற நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் பெற்ற மாதிரியிலிருந்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் நோயின் உக்கிரம் காரணமாக மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த அடுக்குமாடி குடியிருப்பில், இப்பெண்ணின் வீட்டிலிருந்த அவரது பிள்ளைகள் 05 பேர் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 06 பேர் அத்துடன், அவருடன் முதற்கட்ட நேரடித் தொடர்புடைய 'ரந்திய உயன' வீட்டுத் திட்டத்திலுள்ள வீடொன்றில் உள்ள 09 பேர் உள்ளிட்ட 15 பேரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 15 பேரினதும் PCR மாதிரிகளைப் பெற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதோடு, இதனையடுத்து, அவர்கள் அனைவரும் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர் சசங்க ரணசிங்க தெரிவித்தார்.

இதேவேளை குறித்த பெண்ணின் இறுதிக் கிரியைகளுக்காக, மரணமடைந்த பெண்ணின் மூத்த மகன் IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அவரது மூத்த புதல்வர், கடந்த 2 வாரங்களுக்கு மேல் இவர்களுடன் எவ்வித தொடர்பும் இன்றி தனியாக வசித்து வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment