புற்று நோயால் இறந்த 11 ஆயிரம் பேருக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் - இங்கிலாந்தில் வெடித்தது சர்ச்சை - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 5, 2020

புற்று நோயால் இறந்த 11 ஆயிரம் பேருக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் - இங்கிலாந்தில் வெடித்தது சர்ச்சை

‘கொரோனா வருகிறது, கவனமாக இருங்கள்’ என்று புற்று நோயால் இறந்த 11 ஆயிரம் பேருக்கு இங்கிலாந்தின் சுகாதாரத்துறை விழிப்புணர்வு நோட்டீஸ் அனுப்பியிருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் தங்கள் நாட்டின் மூத்த குடிமக்களை பாதுகாப்பதில் எல்லா நாடுகளுமே மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்றன.

குறிப்பாக இவர்களில் இதய நோய், சிறுநீரக கோளாறு, புற்று நோய் மற்றும் நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீசுகளையும் அனுப்பி வருகின்றன.

இந்த நோட்டீசுகள் பெரும்பாலும் தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை நிறுவனம் தனது நாட்டிலுள்ள 9 லட்சம் புற்று நோயாளிகளை எச்சரிக்கும் விதமாக அண்மையில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி வைத்தது.

அதில், ‘நாட்டில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது புற்று நோய் உள்ளவர்களை அதிகமாக தாக்குகிறது. எனவே அனைவரும் மிகக் கவனமாக இருந்து தங்களது சுய பாதுகாப்பை மேம்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறப்பட்டிருந்தது.

இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி ஒப்புதலுடன் இந்த நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நோட்டீசை படித்த புற்று நோய் பாதித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களில் பலர் கடும் அதிர்ச்சிக்கும், குழப்பத்திற்கும் உள்ளாயினர்.

ஏனென்றால், இவர்களில் 10,900 பேர் 2006 - 2017 வரையிலான காலகட்டத்திலேயே புற்று நோய் முற்றி இறந்துபோய் விட்டனர். இந்த தகவல் ஊடகங்களில் பரவ இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்தது.

இது தொடர்பாக புற்று நோய் தாக்கி பலியானவர்களின் குடும்பத்தினர் தங்கள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.

இதையடுத்து, தேசிய சுகாதார சேவை நிறுவனம் தனது வருத்தத்தை தெரிவித்ததுடன் இதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.

புற்று நோயால் இறந்தவர்களுக்கு அனுப்பிய விழிப்புணர்வு நோட்டீசை உடனடியாக திரும்பவும் பெற்றுக் கொண்டது.

கம்ப்யூட்டர்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ‘பாதுகாக்கப்படும் நோயாளிகள் பெயர் பட்டியலில்’ இருந்த அனைவருக்கும் இந்த விழிப்புணர்வு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டதே இந்த குளறுபடிக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த பட்டியலில் இருந்து புற்று நோயால் இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பணியை இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை நிறுவனம் தொடங்கியுள்ளது.

No comments:

Post a Comment