இலங்கையில் உள்ள 11,389 சுற்றுலா பயணிகளுக்கும் அழைப்பு - உதவுவதற்கு இலகுவாக இணையத்தில் பதிவு செய்யுமாறு அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, May 6, 2020

இலங்கையில் உள்ள 11,389 சுற்றுலா பயணிகளுக்கும் அழைப்பு - உதவுவதற்கு இலகுவாக இணையத்தில் பதிவு செய்யுமாறு அறிவிப்பு

இலங்கையில் தற்போது 11,389 சுற்றுலாப் பயணிகள் உள்ளதாகவும், அவர்களை (Tourist & Expatriate Support Center) 'சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டவர் உதவி நிலையம்' எனும் சமீபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அறிவித்தலொன்றை விடுத்துள்ள, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இவ்வேண்டுகோளை விடுத்துள்ளது.

நாட்டில் கொவிட்-19 தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து, இலங்கையின் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து சர்வதேச சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டினரின் விபரங்களை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சேகரித்து வருகிறது.

இலங்கையின் குடிவரவு தரவுகளுக்கமைய, மே 04 ஆம் திகதி நிலவரப்படி நாட்டில் 11,389 சுற்றுலாப் பயணிகள் உள்ளதோடு, அவர்களை அனைவரையும் www.register.sltda.gov.lk எனும் குறித்த இணையதளத்தில் பதிவு செய்யுமாறு, அதிகார சபை அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த தளத்தின் மூலம் கொவிட்-19 தொடர்பான, அத்தியாவசிய பயணத் தகவல்கள் மற்றும் உதவி குறித்த உடனுக்குடனான தகவல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவி கிமர்லி பெனாண்டோ தெரிவிக்கையில், "கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகும் மீண்டெழுந்து வந்த சுற்றுலாத்துறைக்கு கொவிட்-19 ஆனது, பேரிடியாக அமைந்துள்து. கடந்த மார்ச் 12 ஆம் திகதி உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது COVID-19 ஒரு தொற்றுநோயாக அறிவித்தபோது, ​​இலங்கையில் 76,224 வெளிநாட்டு பயணிகள் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து உடனடியாக, சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையிலான 7 நாட்களும் 24 மணி நேரமும் செயற்படும் தொலைபேசி அழைப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, அதன் மூலம் ஊரடங்கு உத்தரவு காலங்களில் போக்குவரத்து சிக்கல்கள் உள்ளிட்ட விமான நிலையத்தை அடைவதற்கு ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாக விமான டிக்கெட்டுகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டன. அத்துடன் வெளிவிவகார அமைச்சு, தூதரகங்கள், விமான நிலைய அதிகாரிகள், விமான சேவை நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து பாதுகாப்பாக நாட்டை விட்டு புறப்படுவதற்கு வசதி செய்து கொடுத்துள்ளது ” என்றார்.

பயணிகளின் அடிப்படை தகவல்களை வழங்கும் குடிவரவு திணைக்களத் தகவல்களைத் தவிர இலங்கையில் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்கும் எந்தவொரு பொறிமுறையும் இல்லை என்றும், இவ்வாறு இணையத்தில் பதிவு செய்வதன் மூலம், இலங்கை சுற்றுலா துறையானது, கொவிட்-19 பரவல் போன்ற அவசர காலங்களில் உதவிகளை வழங்குவதற்கு உதவியாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த தளமானது, இலங்கைக்கு வரும் சர்வதேச சுற்றுலா பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டவருக்கு உதவும் தரவுத்தளமாகவும் தொடர்ந்தும் செயல்படும் எனவும் கிமர்லி பெனாண்டோ தெரிவித்தார்.

இந்த இணையத்தளத்தை வடிவமைப்பதற்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையானது, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தை (ICTA) அணுகியதோடு அவர்களின் தலைமையில், IOM Sri Lanka வினால் நிதியளிக்கப்படும் மென்பொருள் பொறியியல், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் படைப்பாற்றல் சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற, டெக் கீக்ஸ் நிறுவனத்தினால் (TekGeeks (Pvt) Ltd) இவ்வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக, அதிகார சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad