ஈஸ்டர் தினத் தாக்குதலுக்குக் காரணமானோர் அனைவரும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவர் - ‘பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்த சகலரும் பயங்கரவாதிகளேயாவர்’ - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

ஈஸ்டர் தினத் தாக்குதலுக்குக் காரணமானோர் அனைவரும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவர் - ‘பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்த சகலரும் பயங்கரவாதிகளேயாவர்’

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் உளவுத்துறை உட்பட முழு பாதுகாப்பு வலயமும் சிதைக்கப்பட்டதே ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் இடம்பெறக் காரணமாகும்’ என்று ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஈஸ்டர் தின தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் அது தொடர்பாக கருத்துக் கேட்ட போதே சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்தார்.

“கடந்த வருடம் ஏப்ரல் 21ம் திகதி புனித ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதி சஹ்ரான் தலமையிலான குழுவினர் தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் தாக்குதல் மேற்கொண்டு ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது. அன்றைய மிலேச்சத்தனமான தாக்குதல்களில் இறந்தவர்கள் அனைவரும் நிரபராதிகள் ஆவர். மிருகத்தனமான பயங்கரவாதிகளைத் தவிர அன்றைய தினம் உயிரிழந்தவர்களில் அனைவருமே அப்பாவிகளாவர்.

தேவாலயங்களில் பிரார்த்தனை செய்த மற்றும் ஹோட்டலில் உணவருந்த வந்த இலங்கையர்கள்,வெளிநாட்டவர்கள் அனைவரும் அப்பாவிகளே. அவர்கள் எவரும் யாருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை.

ஈஸ்டர் பண்டிகை தினமான கடந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை செய்ய ஆலயங்களுக்கு வந்த வேளையில் அநியாயமாக உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அம்மக்களை கௌரவிக்கின்றேன். நமது தாய்நாட்டிற்கு வருகை தந்து இந்த தேசத்து விருந்தோம்பலை அனுபவிக்க வந்த அனைத்து வெளிநாட்டினருக்காகவும் நான் எனது கவலையை பகிர்ந்து கொள்கின்றேன்.

மேலும், காயங்களுக்குள்ளான சகோதரர்கள் இன்னும் அதே உடல் மற்றும் மனவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான உள்ளங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை செல்லிக் கொள்கின்றேன்.

சகோதரியாக, சொந்த மகளாக நான் நேசித்த இந்த தேசத்தின் முன்னணி சமையல் விற்பன்னராக திகழ்ந்த சாந்தாமாயாதுன்ன இந்த தாக்குதலில் இறந்ததன் சோகத்திலிருந்து மீள முடியாதவர்களில் நானும் ஒருவன் என்பதனயும் சொல்லிக் கொள்கின்றேன்.

ஏன் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்? என்னும் கேள்விக்குப் பதிலில்லை, அதுதான் பயங்கரவாதிகளின் இயல்பு. பயங்கரவாதம் என்பது அரசியல் அல்லது வேறு நோக்கங்களுக்காக அப்பாவி மக்களைக் கொல்வது. எனவே, பயங்கரவாதத்திற்கான காரணம் நியாயமானதாகவோ அல்லது நியாயமற்றதாகவோ இருந்தாலும், பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. ஏனெனில், முன்பு குறிப்பிட்டது போல, அப்பாவிகள் காரணம் இல்லாது, எந்த தொடர்பும் இல்லாது கொல்லப்படுவதே அதன் இயல்பு.

புலனாய்வு என்பது தேசிய பாதுகாப்பின் முதுகெலும்பாகும். எமது வலுவான இராணுவ உளவுத்துறையின் காரணமாகவே உலகின் மிக மோசமான பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, உலகின் ஒரே ஒரு தேசமாக எம்மால் மாற முடிந்தது. நமது உளவுத்துறை அதிகாரிகளை சிறையில் அடைத்து,அவர்களின் புத்திசாலித்தனத்தை குறை மதிப்பீடு செய்தது நல்லாட்சி அரசாங்கம்தான்.

உளவுத்துறை உட்பட முழு பாதுகாப்பு வலையமைப்பும் அப்போதைய ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு, முழுநாட்டையும் காட்டிக் கொடுத்ததனர். வெளிநாட்டு உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டிருந்தால் தாக்குதலைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால் அதனையும் கவனத்திற் கொள்ளாதுஅலட்சியமாகவே ஆட்சியாளர்கள் நடந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு ஈஸ்டர் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்த அனைவரும் பயங்கரவாதிகளே. இந்த தாக்குதலுக்கான விசாரணைகள் தற்போது வெற்றிகரமாக நடத்தப்படுகின்றன. அன்றைய பயங்கரவாதத் தாக்குதலின் காரணகர்த்தாக்கள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தோர் அனைவரும் எதிர்காலத்தில், நீதியின் முன்னால் நிறுத்தப்பட்டு, கொலைக் குற்றச்சாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அவ்வாறு செய்வதன் மூலமே ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து அப்பாவிகளும் ஒரளவிற்கேனும் நீதி வழங்கியதாக அமையும் என்றார் ஓய்வு பெற்ற கடற்படை உயரதிகாரியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர.

ஒலுவில் மத்திய விசேட நிருபர்

No comments:

Post a Comment