பெருந்தோட்ட உற்பத்திகளை தடையின்றி முன்னெடுக்க தேவையான சூழல் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் ரமேஷ் பத்திரண - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

பெருந்தோட்ட உற்பத்திகளை தடையின்றி முன்னெடுக்க தேவையான சூழல் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் ரமேஷ் பத்திரண

(எம்.மனோசித்ரா) 

இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் பெருந்தோட்ட உற்பத்திகளை தடையின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு, கொரோனா ஒழிப்பிற்கு மத்தியில் மக்களின் வாழ்கையை இயல்பு நிலையில் பேணுவதற்கான அத்தியாவசிய சேவைகளை வழங்கும் என ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. 

ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தலைமையில் இம்மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலில் ஈடுபடுவதற்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றும் தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை உற்பத்திகளை தடையின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு பெருந்தோட்டத்துறையிலுள்ள மக்களின் பொருளாதார நெருக்கடியும் இதன்போது பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பெருந்தோட்ட உற்பத்திகள், அவற்றைக் கொண்டு செல்லல் மற்றும் ஏற்றுமதி என்பவற்றுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

இவை தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, ஏற்றுமதி விவசாய அமைச்சு என்பன நிதி அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பொலிஸ், முதலீட்டு சபை, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சுங்க திணைக்களம் உள்ளிட்டவற்றுக்கு உத்தியோகபூர்வ கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளன. அந்த கடிதத்தில் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

அத்தோடு அண்மைக் காலமாக நிறுத்தப்பட்டிருந்த ஏனைய சில உற்பத்திகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு அமைய பாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் இவ்வுற்பத்திகளை மேற்கொள்வதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக சுமார் 137 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை தேயிலை உற்பத்தியாளர் சங்கம் தேயிலை ஏலத்தினை இணையத்தளமூடாக மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறது. இது மிகச் சிறந்த வெற்றியாகும். எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது உற்பத்தி தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. 

மேலும் உலக சந்தையில் இறப்பர் உற்பத்திக்கான கேள்வி அதிகரித்துள்ளது. இறப்பர் உற்பத்தியில் ஈடுபடும் பிரதான நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுகிறது. எனவே நாட்டில் இறப்பர் உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலம் நாம் சிறந்த பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

No comments:

Post a Comment