கணவன் மனைவி பிரச்சினை - மகனின் தாக்குதலில் தாய் பலி - News View

Breaking

Post Top Ad

Saturday, April 4, 2020

கணவன் மனைவி பிரச்சினை - மகனின் தாக்குதலில் தாய் பலி

மகனின் தாக்குதலினால் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (04) திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தனவெட்டை பகுதியில் சந்தனவெட்டை வீதியோரத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த பெண் சம்பூர், சீதனவெளி பகுதியைச் சேர்ந்த இராசையா சரோஜாதேவி (57 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தாயார் மற்றும் அவரது மகன், மருமகள் ஆகியோர் சீதனவெளி பகுதியில் வசித்து வந்த நிலையில் மகனுக்கும் மருமகளுக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது மகனின் மனைவி சந்தனவெட்டை, 64ஆம் கட்டை இதில் உள்ள அவரது தாயாரின் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தாயார் இது தொடர்பாக விசாரிப்பதற்காக வீதியால் சென்று கொண்டிருந்த போது அவரது மகன் வருகை தந்ததாகவும், தகராறு தொடர்பில் கேட்டபோது தாயாரை அடித்து கொன்றுள்ளதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்பொழுது மூதூர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை தாயாருக்கு அருகில் தாக்குதல் நடாத்திய மகன் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment

Post Bottom Ad