அரசியலமைப்பிற்கு அமைவாக அனுமதியைப் பெற பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு மங்கள ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ! - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 29, 2020

அரசியலமைப்பிற்கு அமைவாக அனுமதியைப் பெற பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு மங்கள ஜனாதிபதிக்கு அவசர கடிதம் !

(நா.தனுஜா) 

அரச உத்தியோகத்தர்களுக்குச் செலுத்த வேண்டிய ஊதியம் மற்றும் மேலும் பல செலவுகளுக்கு நிதியைப் பயன்படுத்துவது தொடர்பில் அரசியலமைப்பிற்கு அமைவாக அனுமதியைப் பெறுவதற்கு உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். 

அக் கடிதத்தில் மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளதாவது, அரச செலவுகளுக்கு பயன்படுத்துவதற்காக இம்மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான இடைக்காலக் கணக்கறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த முன்னாள் நிதியமைச்சர் என்ற வகையில் இக்கடிதத்தை எழுதுகிறேன். 

பொதுவாக ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் வருடங்களில் புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி அவரது கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் நடைமுறை அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றாது. 

எனினும் உங்களது அரசாங்கம் கடந்த 2019 நவம்பர் மாதத்தில் பதவியேற்றுக்கொண்டு, சுமார் 3 மாத காலம் கடந்துள்ள நிலையிலும் நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவில்லை. 

மக்களுக்கு வெளிப்படுத்தாத சில காரணங்களின் அடிப்படையில் உங்களது அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காமையினாலும், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியினாலும் நாடு ஒரு அரசியலமைப்பு மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கே இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து அரசாங்கம் நெருக்கடி நிலையொன்றை எதிர்கொள்ள நேரிடும். 

எனவே அதன் பின்னரான காலப்பகுதிக்கு அரச உத்தியோகத்தர்களுக்குச் செலுத்த வேண்டிய ஊதியம் மற்றும் மேலும் பல செலவுகளுக்கு நிதியை பயன்படுத்துவது தொடர்பில் அரசியலமைப்பிற்கு அமைவாக அனுமதியைப் பெறுவதற்கு உடனடியாகப் பாராளுமன்றத்தைக் கூட்டுவது அவசியமாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad