ஊரடங்கு நிலைமை சட்டத்துக்குட்பட்டதே - மீறினால் கைது செய்வோம் - பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண - News View

Breaking

Post Top Ad

Tuesday, April 28, 2020

ஊரடங்கு நிலைமை சட்டத்துக்குட்பட்டதே - மீறினால் கைது செய்வோம் - பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண

(எம்.எப்.எம்.பஸீர்) 

நாட்டில் தற்போது அமுல் செய்யப்பட்டுள்ள ஊரடங்கு நிலைமை சட்டத்துக்குட்பட்டதே என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவுடன் நேற்று நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்று தொடர்பில் ஆஜரான பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

'தற்போது நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலை சட்ட ரீதியானது. இதற்கான அனைத்து அதிகாரங்களும் சட்ட ரீதியாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தொற்று நோய் தடுப்பு, தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் ஊடாக அந்த அதிகாரம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து 5 வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், புதிதாக வர்த்தமானிகளை அச்சிட்டு இருக்க வேண்டியதில்லை. 

கடந்த மார்ச் 20, 25 ஆம் திகதிகளிலும், ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியும் வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனைவிட கடந்த 1925, 1960 ஆம் ஆண்டுகளில் வர்த்தமானி அறிக்கைகளும் இதற்கு பொருந்தும் இதனூடாக தனிமைப்படுத்தல், போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்தல், ஒரு கட்டிடத்திலிருந்து ஆட்களை அப்புறப்படுத்தல், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எம்மால் முன்னெடுக்க முடியும். 

அதற்கான சட்ட ரீதியிலான அங்கீகாரம் உள்ளது. அதன்படியே நாம் இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமையையும் பிறப்பித்துள்ளோம். எவரேனும் நீதிமன்றில் இதனை சவாலுக்கு உட்படுத்தினால் நாம் பதிலளிக்கத் தயார். ஊரடங்கு நிலைமையை எவரேனும் மீறினால் கண்டிப்பாக நாம் அவர்களைக் கைது செய்வோம். 

தொற்று நோய் தடுப்பு, தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தின் 6 ஆம் அத்தியாயத்தின் கீழும், அதனை ஒத்த அத்தியாயமான குற்றவியல் சட்டத்தின் 264 ஆவது பிரிவின் கீழும் இதற்கான இயலுமை உள்ளது ' என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad