வறுமையான குடும்பங்களுக்கு வாரத்துக்கு 5 ஆயிரம் ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டும் : ஹர்ஷன ராஜகருணா - News View

Breaking

Post Top Ad

Monday, April 6, 2020

வறுமையான குடும்பங்களுக்கு வாரத்துக்கு 5 ஆயிரம் ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டும் : ஹர்ஷன ராஜகருணா

(எம்.ஆர்.ஆர்.வஸீம்) 

வறுமை நிலையில் இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் வாரத்துக்கு ஐந்தாயிரம் ரூபா வழங்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான நிவாரணப் பொதியொன்றை அரசாங்கம் வழங்க வேண்டும் என கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். 

சுயதொழில் செய்து வரும் குடும்பங்களுக்கு அரசாங்கம் 5ஆயிரம் ரூபா வழங்குவதற்கு எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொராேனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தி வருவதால் சுயதொழில் செய்துவரும் குடும்பத்தினர் மற்றும் நாட்கூலி செய்து குடும்பத்தை நடத்திவருபவர்கள் உணவுக்கு வழியின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். 

அதனால் 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு வாரத்துக்கு 5ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் அரசாங்கத்துக்கு தொடர்ந்து தெரிவித்து வந்தோம். அதனை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. 

என்றாலும் தற்போது அரசாங்கம் வறுமை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு 5ஆயிரம் ரூபா வழங்க தீர்மானித்திருக்கின்றது. இருந்தபோதும் இந்த 5ஆயிரம் ரூபா ஒருவாரத்துக்கு அல்லாமல், இந்த காலப்பகுதி பூராகவும் என்ற வகையிலே வழங்கப்படுகின்றது. 

அதனையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கமைய, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் ஊடாகவே இது மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலமும் அரசாங்கம் அரசியல் செய்யவே முயற்சிக்கின்றது. அரச அதிகாரிகள் ஊடாக இதனை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் குடும்பம் ஒன்றுக்கு ஒரு வாரத்துக்கு 5ஆயிரம் ரூபா தேவைப்படுவதாக அரசாங்கத்தின் புள்ளி விபர திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வறுமை நிலையில் இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கு ஒரு கிழமைக்கு 5 ஆயிரம் ரூபா வழங்குவதற்கோ அல்லது அதற்கு நிகராக உலர் உணவுப் பொதியொன்றை வழங்குவதற்கோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அத்துடன் அரசாங்கம் சதொச ஊடாக நிவாரண அடிப்படையில் விற்பனை செய்யும் பொதிகளில் பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டுச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிவாரண பொதிகள் பொதுஜன பெரமுன கட்சியின் நிதியத்தில் இருந்து வழங்கப்படுவதல்ல. அரசாங்கத்தின் நிதியாகும். 

நாடு எதிர்கொண்டுள்ள இந்த இக்கட்டான நிலையிலும் அரசாங்கம் குறுகிய அரசிய நாேக்கிலே செயற்படுகின்றது. எனவே அரசியல் நோக்கில் செயற்படாமல் வறுமை நிலையில் இருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் அரசாங்கத்தின் 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad