கடற்படை வீரருக்கு கொரோனா - பொலன்னறுவையில் முதலாவது கொரோனா நோயாளி பதிவு - 12 கிராமங்களுக்கு பூட்டு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

கடற்படை வீரருக்கு கொரோனா - பொலன்னறுவையில் முதலாவது கொரோனா நோயாளி பதிவு - 12 கிராமங்களுக்கு பூட்டு

பொலன்னறுவையில் உள்ள லங்காபுர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 12 கிராமங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாக பொதுச் சுகதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (22) அடையாளம் காணப்பட்ட இவர், பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட முதல் கொரோனா வைரஸ் தொற்றாளர் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலன்னறுவ, புளஸ்திகமவைச் சேர்ந்த குறித்த நபர், வெலிசறை கடற்படை முகாமில் இணைக்கப்பட்ட ஒரு சிப்பாய் என, கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

குறித்த சிப்பாயுடன் வெலிசறை கடற்படை முகாமில் நெருக்கமாக பணியாற்றிய வீரர்களையும் அடையாளம் காண கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றையதினம் (22) இதுவரை இலங்கையில் 13 கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களில் 11 பேர் பேருவளையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதோடு, இறுதியாக அடையாளம் காணப்பட்டவர் ஜாஎல, சுதுவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றைய நபர் பொலன்னறுவையைச் சேர்ந்தவராவார்.

கொரோனா வைரஸ் தொற்று தற்போது 16 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது, அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 115 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் கொழும்பு 12, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து மிக அதிக எண்ணிக்கையில், 62 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டமை இவ்வெண்ணிக்கை அதிகரித்தமைக்கு காரணமாக அமைகின்றது.

அத்துடன் இது வரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 323 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில்
முதல் 100 நோயாளிகள் 57 நாட்களில் பதிவாகியுள்ளனர்
2ஆவது 100 நோயாளிகள் 19 நாட்களில் பதிவாகியுள்ளனர்
3ஆவது 100 நோயாளிகள் 8 நாட்களில் பதிவாகியுள்ளனர்

No comments:

Post a Comment