ஜனாதிபதி சிறந்த நிர்வாகி என்பதால் ஆயிரம் ரூபாவை எப்படி வாங்குவதென்றும், வழங்குவதென்றும் அவருக்கு நன்கு தெரியும் - News View

Breaking

Post Top Ad

Sunday, March 1, 2020

ஜனாதிபதி சிறந்த நிர்வாகி என்பதால் ஆயிரம் ரூபாவை எப்படி வாங்குவதென்றும், வழங்குவதென்றும் அவருக்கு நன்கு தெரியும்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களில் கைச்சாத்திடப்படும். அதன் பின்னர் மார்ச் முதலாம் திகதி முதல் சம்பளம் கணிக்கப்பட்டு அந்த தொகை ஏப்ரல் 10 ஆம் திகதி தொழிலாளர்களின் கைகளுக்கு நிச்சயம் கிடைக்கும். எனவே, இது விடயத்தில் எவரும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை தொண்டமான் புரத்தில் 30 குடும்பங்களுக்கான தனி வீட்டுத் திட்டம் 1999 இல் ஆரம்பிக்கப்பட்டு, 2001 இல் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. அக்குடும்பங்களுக்கான ரன் பீம எனும் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்று (01) கொட்டகலை ஹில்கூல் விருந்தகத்தில் நடைபெற்றது.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேலும் கூறியதாவது,

"பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கும் என அன்று அறிவித்திருந்தேன். இன்றும் அதனையே தெளிவாகவே கூறுகின்றேன். வழங்கப்பட்ட உறுதி மொழியின் பிரகாரம் நிச்சயம் இன்று (01) முதல் ஆயிரம் ரூபா கிடைக்கும்.

சம்பள உயர்வுக்கான ஒப்பந்தத்தில் சில சரத்துகளில் சிக்கல் இருப்பதால் - அவற்றை திருத்துமாறு கோரியிருந்தோம். அதன் அடிப்படையில் இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.
குறிப்பாக ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்பட்டாலும், மார்ச் முதலாம் திகதி முதலே சம்பளம் கணிக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன். இன்று முதல் 31 திகதி வரை தொழிலாளர்கள், வேலைக்கு சென்றால் - வேலை செய்த நாட்களின் பிரகாரம் ஏப்ரல் 10 ஆம் திகதி முழுமையான சம்பளம் கைகளுக்கு கிடைக்கும்.

அத்துடன், பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், ஆயிரம் ரூபா வழங்கப்படாது, அதற்கு பொறுப்புக்கூற யாரும் இல்லை என்றெல்லாம் சிலர் கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிறந்த நிர்வாகி என்பதால் ஆயிரம் ரூபாவை எப்படி வாங்குவதென்றும், வழங்குவதென்றும் அவருக்கு நன்கு தெரியும். நானும் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன். எனவே, ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும்.

அதேவேளை, கடந்த காலங்களில் காணி உறுதிப்பத்திரம் என்ற போர்வையில் அட்டையொன்று வழங்கப்பட்டது. அதனை கிராம சேவகரிடம் எடுத்துசென்றால்கூட எடுபடாது.

ஆனால், இன்று வழங்கப்படுவது காணி சீர்திருத்த ஆணைக்குழுவிடம் இருந்து நேரடியாக கிடைக்கின்றது. இது சட்டபூர்வமானது. இன்று ஒரு தொகுதியினருக்கு வழங்கப்படுகின்றது. ஏனேயோருக்கு விரைவில் பெற்றுக்கொடுப்போம்." - என்றார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ரமேஷ், இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமி, கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் உட்பட மேலும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad