மக்களுக்கான நிவாரணத் திட்டம் நிச்சயம் கிடைக்கும் - கொரோனாவிலும் அரசியல் நடத்தும் நிலையிலேயே ஒரு சிலர் காணப்படுகின்றனர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 24, 2020

மக்களுக்கான நிவாரணத் திட்டம் நிச்சயம் கிடைக்கும் - கொரோனாவிலும் அரசியல் நடத்தும் நிலையிலேயே ஒரு சிலர் காணப்படுகின்றனர்

‘கொரோனா’ எனப்படுகின்ற கொவிட்-19 வைரஸ் வேகமாகப் பரவுவதை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு கட்சி மற்றும் தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் மலையகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையகத்தில் வாழும் அனைவருக்கும் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் இன்று (24) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அசுர வேகத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அவற்றை வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியால் 16 அம்ச நிவாரணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நலன்கருதி எதிர்காலத்தில் மேலும் சில முடிவுகளை அவர் எடுப்பார் என நம்புகின்றோம்.

எனவே, கொரானா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு மலையகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஆனால், கொரோனாவிலும் அரசியல் நடத்தும் நிலையிலேயே இங்கு ஒரு சிலர் காணப்படுகின்றனர். இது சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதற்கான நேரம் அல்ல. அரசியலில் ஆரோக்கியமான போட்டியும், நேர்கொண்ட பார்வையிலான விமர்சனங்களும் இருக்க வேண்டும். 

எனவே, ‘கொரோனா’ வைரஸ் ஒழிப்புச் சமரை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது, எமது மக்களுக்கு எப்படியான திட்டங்களை வழங்குவது போன்ற ஆலோசனைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன், மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அனைவரினதும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் காத்திரமான நடவடிக்கைகளை தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனையின் பேரில் முன்னெடுத்துள்ளது. 

எனவே, மக்களுக்கான நிவாரணத் திட்டம் நிச்சயம் கிடைக்கும். நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்போது இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும்." -என்றுள்ளது.

(கிஷாந்தன் - ஹட்டன் நிருபர்)

No comments:

Post a Comment