எட்டு பேர் கொலை : மரண தண்டனை வழங்கப்பட்ட சார்ஜன்டுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி கோட்டாபய - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

எட்டு பேர் கொலை : மரண தண்டனை வழங்கப்பட்ட சார்ஜன்டுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி கோட்டாபய

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஆர்.எம். சுனில் ரத்நாயக்க ஜனாதிபதி மன்னிப்பில் விடுதலையாகியுள்ளார்.

அவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தின் மிருசுவிலில் இடம்பெற்ற கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு, 13 ஆண்டு கால விசாரணைகளுக்கு பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கடந்த 2015 ஜூன் 25 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பிரதீபன், சின்னையா வில்வராஜா, வில்வராஜா பிரசாத், நடேசு ஜெயச்சந்திரன், கதிரன் ஞானச்சந்திரன், ஞானச்சந்திர சாந்தன் ஆகிய 8 பேரை கொலை செய்தமை உள்ளிட்ட 19 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரால் கடந்த 2002 நவம்பர் 27 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றின் ட்ரையல் அட் பார் மன்றில் சார்ஜன்ட் ஆர்.எம். சுனில் ரத்நாயக்கவுக்கு குற்றப்பத்திரம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விசேட நீதிமன்றம் அவரை குற்றவாளியாக தீர்ப்பளித்து மரண தண்டனை விதித்தது. பின்னர் குறித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.

முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொது மன்னிப்பு பெற்று சிறையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

No comments:

Post a Comment